மாலத்தீவுக்கு ரூ. 790 கோடி கடனுதவி: பிரதமர் நரேந்திர மோடி

மாலத்தீவுக்கு இந்தியா ரூ. 790 கோடி கடனுதவி அளிக்க உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.  மாலத்தீவு அதிபர் இப்ராஹிம் முகம்மது சோலி 4 நாள் அரசு முறைப் பயணமாக நேற்று டெல்லி வந்து…

மாலத்தீவுக்கு இந்தியா ரூ. 790 கோடி கடனுதவி அளிக்க உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 

மாலத்தீவு அதிபர் இப்ராஹிம் முகம்மது சோலி 4 நாள் அரசு முறைப் பயணமாக நேற்று டெல்லி வந்து சேர்ந்தார். இன்று பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசினார்.

இதையடுத்து, நரேந்திர மோடி மற்றும் இப்ராஹிம் முகம்மது சோலி தலைமையில் இரு நாடுகளின் பிரதிநிதிகள் இடையே பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக பேச்சுவா்த்தை நடைபெற்றது.

இதன் தொடர்ச்சியாக இரு நாடுகள் இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

பின்னர் இரு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவின் நிதி உதவியின் கீழ் மாலத்தீவு தலைநகர் மாலியில் கட்டப்பட்டு வரும் 4 ஆயிரம் குடியிருப்புகளுக்கான பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டதாகக் கூறினார். கூடுதலாக 2 ஆயிரம் குடியிருப்புகள் கட்டுவதற்கும் நிதி உதவி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்தார்.

அதோடு, மாலத்தீவுக்கு கடனாக 100 மில்லியன் டாலர் (சுமார் ரூ. 790 கோடி) வழங்க ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்த பிரதமர் மோடி, இதன் மூலம் நிலுவையில் உள்ள பல திட்டங்கள் நிறைவேறும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

இந்திய பெருங்கடல் பகுதியில் தீவிரவாதம், போதைப் பொருள் கடத்தல் ஆகியவை பெரும் சவாலாக உள்ளதாகத் தெரிவித்த பிரதமர் மோடி, நமது பிராந்தியத்தில் அமைதியும் நிலைத்தன்மையும் நிலவுவதை உறுதிப்படுத்தும் நோக்கில் மாலத்தீவின் பாதுகாப்பை மேம்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டார்.

இந்தியா – மாலத்தீவு இடையேயான உறவு தூதரக ரீதியிலானது மட்டுமல்ல என்றும் அதற்கும் அப்பாற்பட்டது என்றும் தெரிவித்த மாலத்தீவு அதிபர் இப்ராஹிம் முகம்மது சோலி, இந்த சந்திப்பு இதனை உறுதிப்படுத்துகிறது என்றார்.

இந்தியாவின் உதவியுடனேயே கொரோனா காலகட்டத்தை எதிர்கொண்டு மாலத்தீவு மீண்டு வந்திருப்பதாகத் தெரிவித்த அந்நாட்டு அதிபர், இந்தியாவின் உதவி இல்லையென்றால் மிகவும் கடினமாக இருந்திருக்கும் என்றார்.

நிதி, மருத்துவம், கோவிஷீல்டு தடுப்பூசி என பல்வேறு உதவிகளை மாலத்தீவுக்கு அளித்து கொரோனா கால நெருக்கடியில் இருந்து மீள இந்தியா பேருதவி புரிந்திருப்பதாக அந்நாட்டு அதிபர் இப்ராஹிம் முகம்மது சோலி நன்றியுடன் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.