தண்ணீர் பிடிப்பதில் தகராறு : ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கு ஆயுள் தண்டனை

ஈரோடு அருகே தெருக்குழாயில் தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறு காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.   ஈரோடு மாவட்டம் ஆர். என். புதூரை சேர்ந்தவர்…

ஈரோடு அருகே தெருக்குழாயில் தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறு காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

ஈரோடு மாவட்டம் ஆர். என். புதூரை சேர்ந்தவர் சித்துராஜ். இவர் அப்பகுதியிலேயே பழைய துணிகளை விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த சித்துராஜிற்கு விபத்து ஏற்பட்டு தலையில் பலமான காயம் ஏற்பட்டது. இதில் சித்துராஜின் மூளையில் ஏற்பட்ட பாதிப்பால் அவர் மன நலம் பாதிக்கப்பட்டிருந்தார்.

 

குடும்பத்தினர் அரவணைப்பில் இருந்தாலும் சுய நினைவு இல்லாத நிலையில் அவ்வூரிலேயே சுற்றி திரிந்து வந்திருக்கிறார். இந்த நிலையில், கடந்த 2017ம் ஆண்டு தன் வீட்டிற்கு அருகாமையில் இருந்த குடிநீர் பைப்பில் கைகால்களை கழுவி வீட்டு தண்ணீர் குடித்தார். இதைப் பார்த்த அதே பகுதியை சேர்ந்த சங்கர் மனைவி பானுமதி அவரது மகள் சிவரஞ்சனி, இவர்களது உறவினர்களான சித்ரா, கல்யாணி, சகுந்தலா ஆகியோர் சித்துராஜிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

 

மேலும் தகாத வார்த்தைகளாலும் திட்டியுள்ளனர். கூச்சல் சத்தம் கேட்டு வந்த சித்துராஜின் அம்மா இந்திராணி, சண்டையில் ஈடுபட்ட பெண்களிடம் பேசி சமரசம் செய்ய முயன்றார். ஆனால் அப்பெண்களோ சண்டையை முடிவுக்கு கொண்டு வராமல் தொடர்ந்து வாய்ச் சண்டை செய்து வந்துள்ளனர். என்ன நடக்கிறது என்பதை அறியாத நிலையில் இருந்த சித்துராஜ் தன் கையில் வைத்திருந்த கத்தியால் சிவரஞ்சினியின் கணவனை குத்தினார்.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த சிவரஞ்சினி தனது கணவரின் உயிரின் பாதுகாக்க முயற்சித்துள்ளார். இதை பார்த்த மற்ற பெண்களும் தங்கள் பங்குக்கு சித்துராஜை கையில் கிடைத்தவற்றையெல்லாம் கொண்டு கடுமையாக தாக்கினர். உச்சகட்டமாக எழுந்த வெறிச்செயலாக, சித்துராஜ் வைத்திருந்த கத்தியை பிடுங்கி, உடலெங்கும் கத்தியால் குத்தினர். ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

 

தகவலறிந்து வந்த சித்தோடு போலீசார் , பானுமதி, சிவரஞ்சனி, ரங்கநாதன், சித்ரா, கல்யாணி, சகுந்தலா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். ஐந்து வருடங்களாக நடந்த வந்த வழக்கு விசாரணையில் கொடூரக் கொலையில் ஈடுபட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கும் ஆயுள் தண்டனை வழங்கி மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.

 

– இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.