ஐபிஎல் போட்டிகளில் புகையிலைப் பொருட்களின் விளம்பரங்களை தடை செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த மார்ச் 22ம் தேதியன்று நடைபெற்ற இந்தியா – ஆஸ்திரேலியா போட்டிகளின் போது புகையற்ற புகையிலைப் பொருட்களின் விளம்பரங்கள் சட்டவிரோதமாக திரையிடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இந்த தவறு ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளின் போது நடைபெறக்கூடாது என்பதற்காகவே இந்த கடிதத்தை எழுதுவதாகவும் அவர் அதில் தெரிவித்துள்ளார்.
ரசிகர்களின் விளையாட்டு மோகத்தை பயன்படுத்தி, அவர்களிடம் புகையில்லா புகையிலைப் பொருட்கள், விளம்பரங்கள் வழியாக திணிக்கப்படுவதை அனுமதிக்கக் கூடாது என்று தெரிவித்துள்ள அவர், COTPA 2003 சட்டத்தின் படியும், மத்திய அரசின் நுகர்வோர் பாதுகாப்பு ஆணை உத்தரவின்படியும் புகையிலை விளம்பரங்கள் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
இதையும் படியுங்கள் : முதல் நாளில் ரூ.12.3 கோடியை அள்ளியது சிம்புவின் ’பத்து தல’
எனவே சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டிகளின்போது புகையற்ற புகையிலைப் பொருட்களின் விளம்பரங்கள் காட்சிப்படுத்துவதை தடை செய்வதுடன், அவை தொலைக்காட்சி மூலம் விளம்பரப்படுத்தப்படுவதையும் தடை செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.







