பழமையான கோயில்களைப் பாதுகாக்க வேண்டும்; உயர்நீதிமன்றம் உத்தரவு

பழமையான கோயில்களைப் பாதுகாக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தினாலும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கோவில்களைப் போல உருவாக்க முடியாது என்பதைக் கருத்தில்கொண்டு, பழமையான கோவில்களைப் பாதுகாக்க…

பழமையான கோயில்களைப் பாதுகாக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தினாலும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கோவில்களைப் போல உருவாக்க முடியாது என்பதைக் கருத்தில்கொண்டு, பழமையான கோவில்களைப் பாதுகாக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த உத்தரவை மீறும் வகையில் சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் ஓவியங்கள் அழிக்கப்பட்டு வெள்ளையடிக்கப்படுவதாகவும், நாமக்கல் சோளீஸ்வரர் கோவிலின் பழமையான கற்கள் உடைக்கப்படுவதாகவும், இதேபோல் திருவெள்ளாறை கோவிலும் சேதப்படுத்தப்படுவதாக ரங்கராஜன் நரசிம்மன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த நிலையில், குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக இந்து அறநிலையத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போது நீதிபதிகள், நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தினாலும், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கோயில்களைப் போல அற்புதமான கட்டுமானத்துடனும், சிறந்த தொழில்நுட்பத்துடனும், முறையான ஆகம விதிப்படியும் கட்டமுடியாது எனத் தெரிவித்தனர். எனவே பழமையான கோயில்களை முறையாகப் புனரமைத்து, சிறப்பாகப் பாதுகாக்க வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதிகள், மனுதாரரின் புகார்கள் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் ஆவணங்களைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை இரண்டு வாரங்களுக்குத் தள்ளி வைத்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.