ராஜபாளையம் அருகே கல்லூரி பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரில் பயணம் செய்த 3 பேர் உயிரிழந்தனர்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் இயங்கி வரும் தனியார் பெண்கள் கல்லூரியின் பேருந்து மாணவிகளை ஏற்றிக் கொண்டு தென்காசி சாலையில் சேத்தூர் நோக்கி சென்றுள்ளது. அப்போது எதிர் திசையில் வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து மீது மோதியதில், காரில் பயணம் செய்த இரண்டு பெண்கள், ஒரு ஆண் என மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பேருந்தில் சென்ற 7 மாணவிகள் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.
தகவலறிந்து வந்த விருதுநகர் மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் தலைமையிலான போலீசார், காயமடைந்த மாணவர்களை சிகிச்சைக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை இடிபாடுகளிலிருந்து மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். இந்த விபத்தின் காரணமாக ராஜபாளையம் – தென்காசி சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில், விபத்தில் உயிரிழந்தவர்கள் யார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.








