முக்கியச் செய்திகள் கட்டுரைகள் சினிமா

நல்லது செய்ய வேண்டும் என்றால் கூட ஒரு கெட்ட முகம் தேவைப்படுகிறது – பத்து தல விமர்சனம்


தினேஷ் உதய்

கட்டுரையாளர்

ஒபலி என்.கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு, கவுதம் கார்த்திக் நடித்துள்ள படம் பத்து தல. இந்தப் படத்தில் பிரியா பவானி சங்கர், கவுதம் மேனன், டிஜே, கலையரசன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கன்னடத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற மஃப்ட்டி படத்தின் தமிழ் ரீமேக் தான் பத்து தல. ஸ்டுடியோ கிரீன் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

தமிழ்நாட்டை யார் ஆட்சி செய்ய வேண்டும் எந்த கட்சி ஆட்சியில் இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்பவர் தான் ஏஜிஆர். கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த பெரிய தொழிலதிபர் மற்றும் தமிழ்நாடே அதிரும் மிகப்பெரிய தாதா தான் ஏஜிஆர் (சிலம்பரசன்). இப்படிப்பட்ட சூழ்நிலையில் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருக்கும் சந்தோஷ் பிரதாப் காணாமல் போகிறார். அவரை தேடும் பணியில் சிபிஐ தீவிரமாக விசாரணையில் ஈடுபட்டு வருகிறது. துணை முதலமைச்சர் கௌதம் மேனனுக்கும் முதலமைச்சரும் சில பிரச்னைகள் இருப்பதை உணரும் சிபிஐ பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வரும் அதே நேரத்தில் அண்டர்கவர் போலீசான கௌதம் கார்த்திக் சிம்புவை பிடிக்க அவரிடம் தாதாவாக வேலைக்கு சேர்கிறார். காணாமல் போன முதலமைச்சர் கிடைத்தரா ? சிம்புவை கௌதம் கார்த்திக் கைது செய்தாரா என்பது தான் பத்து தல படத்தின் கதை.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

வெந்து தணிந்தது காடு படத்தின் வெற்றிக்கு பிறகு இப்படம் வெளியாவதாலும் சிம்பு, கௌதம் மேனன் கூட்டணி மீண்டும் இணைந்ததாலும் இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. அதுமட்டும் அல்லாமல் படம் முழுக்க அரசியல் வசனங்களும், யார் அந்த அரசியல் தலைவர்கள் என்ற விஷயங்களும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது.

டான் கதை என்பதாலும் அரசியல் படம் என்பதாலும் பல்வேறு கதாபாத்திரங்கள் படத்தில் இடம் பெற்றுள்ளன. எத்தனை கதாபாத்திரங்கள் இருந்தாலும் ஒவ்வொருவரும் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்திற்கு ஏற்ப சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர்.

விக்ரம் படத்தை போல இந்த படத்தின் முதல் பாதியில் சிம்பு சில காட்சிகள் மட்டுமே வந்து செல்கிறார். ஆனால் அது படத்திற்கு தேவையான ஒன்றாகவே உள்ளது. படத்தின் இரண்டாம் பாதி முழுவதும் தனி ஒருவராக சிம்பு இந்த படத்தை துமந்து சென்றுள்ளார். சிம்புவின் நடிப்பை பற்றி சொல்லி தெரிய வேண்டியது இல்லை. அந்த அளவிற்கு அவரது நடிப்பு சிறப்பாக உள்ளது. மாஸ் காட்சிகள், சென்டிமென்ட் காட்சிகள், ஆக்ஷன் காட்சிகள் என மெனக்கெட்டு நடித்துள்ளார். குறிப்பாக இந்த படத்திற்காக குறித்த உடல் எடையை மீண்டும் அதிகரித்து நடித்தது அவரின் மெனக்கெடலை காட்டுகிறது.

சிம்புக்கு இணையாக தொடக்கம் முதல் இறுதிவரை படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருந்தது கௌதம் மேனன் தான். அரசியல் கட்சி தலைவராக துணை முதல்வராக அவர் ஏற்றிருக்கும் கதாபாத்திரத்திற்கு கூடுதல் வலு சேர்த்துள்ளார். அவர் பேசும் அரசியல் வசனங்களும், வில்லத்தனமும் நம்மை ரசிக்க வைக்கின்றன.

டான் படங்கள் என்றாலே கண்டிப்பாக அண்டர்கவர் காவல்துறை அதிகாரிகள் இருப்பார்கள் அப்படிப்பட்ட ஒரு அண்டர்கவர் காவல்துறை அதிகாரியாக மாஸ் காட்டியுள்ளார் கௌதம் கார்த்திக். வசனம், ஆக்ஷன் காட்சிகள் என தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். இதற்கு முன்பு பார்த்த கௌதம் கார்த்தியை விட சற்று வித்தியாசமான கௌதம் கார்த்திக்கை இந்த படத்தில் பார்க்கலாம்.

படத்தின் நாயாகி பிரியா பவானி சங்கர் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்திற்கு கச்சிதமான தேர்வாக நடித்துள்ளார். அரசு ஊழியராகவும், கௌதம் கார்த்தியின் காதலியாகவும் வலு சேர்த்துள்ளார். மற்ற நடிகர்கள் கலையரசன், டிஜே, ஜோ மயூரி தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாப்பாத்திரங்களுக்கு ஏற்ப சிறப்பாக நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு மிகப்பெரிய பலம் ஏ.ஆர்.ரஹ்மான் இசையும், பாடலும் தான். அதிலும் ஏ.ஆர்.ரஹ்மான் குரலில் வெளியான அக்கறையில பாடல் மிகச் சிறப்பு. அதே போல பின்னணி இசை மற்றும் பிஜிஎம் பல காட்சிகளில் நம்மை அதிர வைக்கிறது. இந்த படத்தில் இடம்பெற்றுள்ள இராவடி பாடலின் மூலமாக நடிகை சாயிஷா மீண்டும் கம் பேக் கொடுத்துள்ளார்.

ஒபலி என்.கிருஷ்ணா இயக்குனராக மட்டும் அல்லாமல் முதலமைச்சராகவும் இந்த படத்தில் சிறப்பாக நடித்துள்ளார். காட்சிகளின் வடிவமைப்பு மற்றும் அதை கொண்டு சென்ற விதம் சிறப்பாக இருந்தது. அதே நேரத்தில் திரைக்கதையில் சற்று கவனம் செலுத்தி இருந்தால் கூடுதல் சிறப்பாக இருந்திருக்கும். வழக்கமான சினிமாவே இரண்டாம் பாதியை கொண்டு சென்றது, சென்டிமென்ட் காட்சிகள் சற்று சலிப்பை ஏற்படுத்துகிறது.

தற்போதைய அரசியல் சூழலையும் நிறைய கற்பனை காட்சிகளையும் கொண்டு பத்து தல படம் உருவாகியுள்ளது. அரசியலை விரும்பும் ரசிகர்களுக்கு இந்த படம் பெரிய மாஸ் படமாக இருக்கும். அதே நேரத்தில் மற்ற ரசிகர்களுக்கு சற்று குறைவாகவே தெரியும். குறைகளை தவிர்த்து பார்த்தால் அரசியல் களத்தில் அதகளம் செய்துள்ளது பத்து தல படம் என்று கூட சொல்லலாம்.

—-தினேஷ் உதய்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram