விமான நிலையத்தில் ஒவ்வொரு முறையும் தான் அவமானப்படுத்தப்படுவதாக நடிகை சுதா சந்திரன், பிரதமர் மோடிக்கு கோரிக்கை வைத்த நிலையில், மத்திய தொழிற் பாதுகாப்புப் படை அவரிடம் மன்னிப்புக் கேட்டுள்ளது.
தமிழில், வசந்த ராகம், சின்னப்பூவே மெல்லப் பேசு, சின்னத்தம்பி பெரியதம்பி, சத்யம், வேங்கை உட்பட பல படங்களில் நடித்தவர் சுதா சந்திரன். இந்தி, மலையாளம், தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். நாகினி தொடரில் நடித்ததன் மூலம் இன்னும் பிரபலமானவர் இவர். சிறுவயதில் விபத்தில் ஒரு காலை இழந்த சுதா சந்திரன், செயற்கை காலுடன் பரதமர் ஆடி புகழ்பெற்றவர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், இன்ஸ்டாகிராமில், விமான நிலைய அதிகாரிகளால், தான் ஒவ்வொரு முறையும் அவமானப்படுத்தப்படுவதாகத் தெரிவித்துள்ள அவர், பிரதமர் மோடிக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். அவர் வெளியிட்ட வீடியோவில் கூறியிருப்பதாவது:
நான் சுதா சந்திரன், நடிகை மற்றும் நடனக் கலைஞர். நான் செயற்கை காலுடன் நடனமாடி , நாட்டை பெருமைப்படுத்தி இருக்கிறேன். ஆனால் ஒவ்வொரு முறையும் தொழில்முறை பயணம் மேற்கொள்ளும்போது, விமான நிலையத்தில் நிறுத்தப்படுகிறேன். மத்திய தொழிற் பாதுகாப்புப் படையினரிடம் (CISF), என் காலில் வெடிபொருள் கண்டறியும் சோதனையை (ETD) மேற்கொள்ளுமாறு கூறுகிறேன். ஆனால், அவர்கள்ர், என் செயற்கை காலை அகற்றி அவர்களிடம் காண்பிக்க வேண்டும் என நினைக்கிறார்கள். அது சாத்திய மா மோடிஜி?
ஒரு பெண் இன்னொரு பெண்ணுக்கு நம் சமூகத்தில் கொடுக்கும் மரியாதை இதுதானா? மூத்த குடிமக்களுக்கு சிறப்பு அடையாள அட்டையை வழங்குங்கள் என்பதே எனது வேண்டுகோள். இவ்வாறு சுதா சந்திரன் அந்த வீடியோவில் கூறியிருந்தார். இது பரபரப்பானது. சமூக வலைதளங்களில் அவருக்கு ஆதரவு பெருகியது.
CISF apologises to actor Sudhaa Chandran after she shared a video on being stopped at airport for prosthetic limb. "We'll examine why the lady personnel concerned requested Sudhaa Chandran to remove prosthetics & assure that no inconvenience is caused to travelling passengers." pic.twitter.com/oaVThYB0Lv
— ANI (@ANI) October 22, 2021
இந்நிலையில், சுதா சந்திரனிடம் மத்திய தொழிற் பாதுகாப்புப் படை மன்னிப்புக் கேட்டுள்ளது. இதுபற்றி ட்விட்டரில், உங்களுக்கு ஏற்பட்ட தொந்தரவுக்கு வருத்தம் தெரிவிக்கிறோம். எதிர்பாராத நேரங்களில் மட்டுமே செயற்கை பாகங்களை நீக்கிப் பரிசோதிக்க வேண்டும் என்பது விதிமுறை. அந்த பெண் அதிகாரி, உங்களை ஏன் அப்படிச் செய்யச் சொன்னார் என்று தெரியவில்லை. விசாரிக்கிறோம் என்று மத்திய தொழிற் பாதுகாப்புப் படை கூறியுள்ளது.