உயர்நீதிமன்ற தீர்ப்பை மீறி டிஎன்பிஎஸ்சி செயல்படுகிறது: ராமதாஸ்

குரூப் -1 தேர்வை நடத்துவதில் சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பை மீறி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் செயல்படுவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டி உள்ளார். இது தொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 2020-இல்…

குரூப் -1 தேர்வை நடத்துவதில் சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பை மீறி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் செயல்படுவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டி உள்ளார்.

இது தொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 2020-இல் நடந்த குரூப் -1 முதல் நிலைத் தேர்வில் தவறான வினாக்களால் தேர்வர்கள் பாதிக்கப்பட்டதையும், பாதிக்கப்பட்ட தேர்வர்களை முதன்மைத் தேர்வில் பங்கேற்க அனுமதிக்கும்படி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

முதன்மைத் தேர்வுக்கான சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், பாதிக்கப்பட்ட தேர்வர்களுக்கு அனுமதி வழங்கவில்லை என குற்றம்சாட்டியுள்ள ராமதாஸ், இது சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பை அப்பட்டமாக மீறும் செயல் என கூறியுள்ளார்.

குரூப் -1 முதன்மைத் தேர்வு தேதியை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவிக்கும் முன்பாகவே பிப்ரவரி 27 முதல் மார்ச் 7 வரை இந்திய வனப்பணி முதன்மைத் தேர்வுகள் அறிவிக்கப்பட்டது எனவும் டி.என்.பி.எஸ்.சி இதை கருத்தில் கொள்ளாததால் தமிழ்நாடு தேர்வர்கள் இரு தேர்விலும் பங்கேற்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது எனவும் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

போட்டித் தேர்வர்கள் இரு வழிகளிலும் பாதிக்கப்படுவதைத் தடுக்க, வரும் 4-ஆம் தேதி தொடங்கவுள்ள குரூப்-1 முதன்மைத் தேர்வை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஒத்தி வைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ள ராமதாஸ், தவறான வினாக்களால் பாதிக்கப்பட்ட தேர்வர்களை முதன்மைத் தேர்வுக்கு அனுமதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.