ஓரிரு நாட்களில் பிளஸ் 2 மதிப்பெண் கணக்கீட்டு முறை குறித்த அறிவிப்பு வெளியாகும், என பள்ளிக்கல்வி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை தலைமைச் செயலகத்தில், முதலமைச்சருடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், பள்ளிக்கல்வித்துறை செயலாளர், உயர்கல்வித் துறைச் செயலாளர் ஆகியோர், நேற்று ஆலோசனை மேற்கொண்டனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், மாணவர்களுக்கு மதிப்பெண் பட்டியல் வழங்குவது குறித்தும், உயர்கல்வி மாணவர் சேர்க்கை குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. பிளஸ் 2 மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்படுவது குறித்து ஆராய, பள்ளிக் கல்வித்துறை செயலாளர் தலைமையில், குழு அமைக்கப்பட்டிருந்தது. அந்த குழுவானது 5 வகையான மதிப்பீட்டு வழிமுறைகளை அரசுக்கு இக்குழு பரிந்துரைத்துள்ளது.
மத்திய அரசின் சிபிஎஸ்இ பிளஸ் 2 மதிப்பெண் கணக்கீடு மாதிரியைக் கொண்டு 10, 11-ம் வகுப்பு இறுதி தேர்வு மதிப்பெண்களுடன், 12-ம் வகுப்பு செய்முறைத் தேர்வு மதிப்பெண்களும், கணக்கில் எடுத்துக்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது. முன்னதாக பிளஸ் 2 மாணவர்கள், 10-ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களை தேர்வுத்துறை கோரியிருந்தது,
எனவே, 10-ம் வகுப்பு மதிப்பெண்களும், கணக்கீட்டில் பயன்படுத்தப்படும் வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஓரிரு நாட்களில் மதிப்பெண் கணக்கீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என பள்ளிக்கல்வி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.







