12 ஆம் வகுப்பு மதிப்பெண் கணக்கீடு ஓரிரு நாட்களில் வெளியாக வாய்ப்பு என பள்ளிக்கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கொரோனா பெருந்தொற்று காலத்தில் மாணவர்களின் உடல்நலன், மனநலனை கருத்தில் கொண்டு 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதனை தொடர்ந்து மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது எப்படி என்பது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் தலைமையில் குழு அமைத்து உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில், மதிப்பெண் கணக்கீடு தொடர்பாக ஆராய அமைக்கப்பட்ட குழு, 5 வகையான மதிப்பீட்டு வழிமுறைகளை அரசுக்கு பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 10, 11-ஆம் வகுப்பு இறுதித் தேர்வு மதிப்பெண்களுடன் 12-ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வு மதிப்பெண்களும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே 12-ஆம் வகுப்பு மாணவர்களின், 10-ஆம் வகுப்பு மதிப்பெண்களை தேர்வுத்துறை கோரிய நிலையில், அவற்றில் இருந்து அதிகளவில் மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.







