கொரோனா பொது ஊரடங்கின்போது விவசாயிகளுக்கு ஏற்படும் சிரமங்களுக்கு தீர்வு காண்பதற்கு தொலைபேசி எண்களை தமிழ்நாடு வேளாண்மை துறை வெளியிட்டுள்ளது.
கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக, தமிழகத்தில் பொது ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இந்நிலையில், கொரோனா ஊரடங்கால் விவசாயிகள் எதிர்கொள்ளும் சிக்கல்களுக்கு தீர்வு காண தமிழ்நாடு வேளாண்மைதுறை உதவிக்கரம் நீட்டுகிறது.
வேளாண்மை துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள உத்தரவில், விவசாயிகள் தங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண மாநில அளவிலான 044 – 2225- 3884 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம் எனக் கூறப்பட்டுள்ளது.
மாவட்ட வாரியாக தொலைபேசி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் தங்களின் விளைபொருட்களை ஒழுங்குமுறை விற்பனைக்கிடங்குகளில் உள்ள சேமிப்புக்கிடங்குகளில் 180 நாட்கள்வரை வைத்து பாதுகாக்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ள விளைபொருட்களுக்கு அதிகபட்சமாக சந்தை மதிப்பில் 75% அல்லது 3 லட்சம் ரூபாய் இவற்றில் எதுகுறைவோ அதனை கடனாக பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பழங்கள் மற்றும் காய்கறி சாகுபடி செய்யும் விவசாயிகள் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் உள்ள குளிர்சாதனக்கிடங்கு வசதிகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் வேளாண்மை துறை தெரிவித்துள்ளது.







