தமிழ்நாட்டில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு நாளை மறுநாள் காலை 6 மணியுடன் முடிவுக்கு வருகிறது. இதையடுத்து 7ம் தேதி முதல் வரும் 14-ம் தேதிவரை சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக முதலமைச்சர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, “கொரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலைத் தடுப்பதற்காக இந்திய அரசின் வழிகாட்டுதலின்படி தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 25-ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு குறிப்பிட்ட சில தளர்வுகளுடன் அமலிலிருந்து வருகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்திய அரசின் உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அரசாணையில் கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் ஜூன் மாத இறுதி வரை தொடர்ந்து அமலில் இருக்கும் என ஆணையிடப்பட்டுள்ளது.
நோய்த் தொற்று பரவலைத் தடுக்கும் பொருட்டு கடந்த மே மாதம் 24- ம் தேதி முதல் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுவருகிறது. இந்த ஊரடங்கு நாளை மறுநாள் காலை 6 மணிக்கு முடிவுக்கு வருகிறது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் கொரோனா நோய்த் தொற்றின் தன்மையினை மாவட்ட வாரியாக ஆய்வு செய்தும், நோய்த் தொற்று பரவாமல் தடுத்து, மக்களின் விலைமதிப்பற்ற உயிர்களைக் காக்கும் நோக்கத்திலும் இந்த முழு ஊரடங்கு , வரும் 7ஆம் தேதி முதல் 14ம் தேதி காலை 6 மணிவரை சில தளர்வுகளுடன் மேலும் ஒரு வார காலத்திற்கு நீட்டிக்கப்படுகிறது.
கொரோனா நோய்த் தொற்று அதிகமாக உள்ள கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டும் கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்படுகிறது.
கொரோனா நோய்த் தொற்று குறைந்த மற்ற மாவட்டங்களுக்கு ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள தளர்வுகளுடன் கூடுதல் செயல்பாடுகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது” என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.