தமிழக சட்டமன்றத்தில் வெறும் 5 % குறைந்த பெண் பிரதிநிதித்துவம்!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 12 பெண் வேட்பாளர்கள் மட்டுமே தேர்வாகி உள்ள நிலையில் பெண்களின் பிரதிநிதித்துவம் வெறும் 5 % குறைந்துள்ளது. கடந்து சட்டமன்ற தேர்தலில் 21 பெண் பிரதிநிதிகள் வெற்றிபெற்று…

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 12 பெண் வேட்பாளர்கள் மட்டுமே தேர்வாகி உள்ள நிலையில் பெண்களின் பிரதிநிதித்துவம் வெறும் 5 % குறைந்துள்ளது.

கடந்து சட்டமன்ற தேர்தலில் 21 பெண் பிரதிநிதிகள் வெற்றிபெற்று சட்டமன்றம் சென்றனர். அந்த என்னிக்கை தற்போது 12 ஆக குறைந்துள்ளது. திமுகவிலிருந்து 6 பேரும், அதிமுகவிலிருந்து 3 பேரும் பாஜகவிலிருந்து 2 பேரும் காங்கிரஸிலிந்து ஒருவரும் பெண் பிரதிநிதிகளாக இம்முறை சட்டமன்றத்திற்கு தேர்வாகியுள்ளார்.

தொடரும் 33 % போராட்டம்

1996 –ம் ஆண்டு தமிழகத்தில் நடைபெற்ற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் பெண்களுக்கு 33 % இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. அது மேலும் விரிவுபடுத்தப்பட்டு 2016 –ம் ஆண்டு 50 சதவிதமாக உயர்த்தப்பட்டது. வரவேற்கத்தகுந்த இந்த அம்சம் இன்னும் நமது தமிழகச் சட்டமன்றத்தை எட்டவில்லை.

பெண்களுக்கு நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் 33 %இட ஒதுக்கீட்டை வழங்கும் “பெண்கள் இட ஒதுக்கீடு சட்டம்” நாடாளுமன்றம் நிறைவேற்றாமல் இருப்பது இதற்கான முக்கிய காரணமாகும். நாடாளுமன்றத்தில் மாநில சட்டமன்றங்களிலும் பெண்களுக்கு 33 சதம் இட ஒதுக்கீடு வழங்கவேண்டும் என்கிற கோரிக்கையும் அதற்கான போராட்டமும் இன்று வரை நீடிக்கிறது.

முத்துலட்சுமி ரெட்டி, சௌந்தரம் ராமச்சந்திரன்

வரலாறு படைத்த பெண்கள்

விடுதலைக்கு முன்பு, தற்போதைய ஆந்திரா, கேரளா, கர்நாடகா மாநிலங்களின் சில பகுதிகளையும் உள்ளடக்கிய சென்னை மாகான சட்டமன்றத்தின் முதல் பெண் உறுப்பினராக டாக்டர்.முத்துலட்சுமி ரெட்டி 1927 –ம் ஆண்டு முதல் பெண்ணாக தேர்வானார். மாகான சபையின் முதல் பெண் துணைத் தலைவராகவும் அவர் செயலாற்றியுள்ளார்.

விடுதலைக்குப் பிறகு 1952 –ம் ஆண்டு நடைபெற்ற சென்னை மாகானதிற்கான தேர்தலில் முதல் பெண் சட்டமன்ற உறுப்பிராக காங்கிரஸ் கட்சி சார்பில் ஆத்தூர் தொகுதியில் போட்டியிட்ட சௌந்தரம் ராமச்சந்திரன் மாகான உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார்.

மொழிவழியில் தமிழகம் தனி மாநிலமாக 1956 –ம் ஆண்டு நவம்பர் ஒன்றாம் தேதி பிரிக்கப்பட்டது. அதன்பிறகு 1957 –ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் இவர் வேடச்சத்தூர் தொகுதியில் போட்டியிட்டு வென்றார். ஆனால் அந்த தேர்தலில் இவரோடு சேர்ந்து ஒன்பது பெண் உறுப்பினர்கள் சட்டமன்றத்தில் நுழைந்தனர். இந்த எண்ணிக்கை 1962 ல் பத்தாக உயர்ந்தது. அதன் பிறகு வெகுகாலமாக மூன்று, ஐந்து, இரண்டு என ஒற்றை இலக்கையே சுற்றிச் சுற்றி நின்றது.

அதிக எண்ணிக்கையே 13 சதவிதம்தான்

தமிழகச் சட்டமன்றத்திற்கு தேர்வு செய்யப்படும் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 234 ஆகும். அதில் 1991- ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில்தான் 32 பெண்கள் சட்டமன்றத்திற்குத் தேர்வு செய்யப்பட்டனர். அதோடு தேர்ந்தெடுக்கப்பட்ட அப்பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் கணக்கிட்டால் வெறும் 13.68 சதம்தான் பெண்களின் பங்கேற்பாகும். தமிழகச் சட்டமன்ற வரலாற்றில் பெண்களின் அதிகபட்சமான பங்கேற்பே இதுநாள் வரை இதுதான்.

பின்னர் 1977 –ம் ஆண்டு இரண்டு பெண் உறுப்பினர்கள் மட்டுமே தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்வு செய்யப்பட்டனர். இது வெறும் 0.85 சதவீதமாகும்.

2001 –ம் ஆண்டு 25 பெண் உறுப்பினர்களும்

2006 –ம் ஆண்டு 22 பெண் உறுப்பினர்களும்

2011 –ம் ஆண்டு 17 பெண் உறுப்பினர்களும்

2016 –ம் ஆண்டு 21 பெண் உறுப்பினர்களும் வெற்றி பெற்று சட்டமன்றத்திற்குத் தேர்வாகினர்.

இந்த ஆண்டுகளில்தான் பெண் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை இரட்டை இலக்கத்தில் நீடித்தது. ஆனபோதும் அது தமிழகச் சட்டமன்ற உறுப்பினர்களில் 10 %இடங்களுக்குள்தான் நிற்கிறது. கட்சிகள் வேட்பாளர்களைத் தேர்தலில் நிறுத்துவதிலிருந்தே இந்த ஏற்ற இறக்கங்கள் துவங்கிவிடுகிறது.

பின்னுக்கு தள்ளப்பட்ட பெண் பிரதிநிதித்துவம்

தமிழகத்தில் வாக்காளர் பட்டியலின்படி ஆண்களைவிடப் பெண் வாக்காளர்களே அதிகம். பதிவாகும் வாக்கு சதவீதத்தின் அடிப்படியிலும் ஆண்களைவிடப் பெண்களே அதிகமான வாக்களிக்கின்றனர். ஆனபோதும் சமூகத்தில் சரிபாதியாக இருக்கும் பெண்களுக்கு உரியப் பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின் முடிவுகள்படி 12 பேர் மட்டுமே பெண் பிரதிநிதிகளாக தமிழக சட்டமன்றத்திற்கு தேர்வாகியுள்ளனர். இது வெறும் 5 சதவீத பிரநிதித்துவமேயாகும். இந்த எண்ணிக்கை, தமிழக சட்டமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை மீண்டும் பின்னுக்குத் தள்ளியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.