தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் நிலையில், இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளுக்காக, கடந்த நவம்பரில் 4 நாட்கள் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, புதிதாக பெயர்கள் சேர்க்கப்பட்டன. திருத்தப் பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், இறுதி வாக்காளர் பட்டியல் தமிழகம் முழுவதும் இன்று வெளியானது. புதிய வாக்காளர் பட்டியலின் படி, தமிழகத்தில் மொத்தம் 6 கோடியே 26 லட்சம் பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். ஆண் வாக்காளர்கள் 3 கோடியே 8 லட்சம் பேரும், பெண் வாக்காளர்கள் 3 கோடியே 18 லட்சம் பேரும் உள்ளனர். மூன்றாம் பாலின வாக்காளர்கள் 7 ஆயிரத்து 246 பேர் உள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இறுதி வாக்காளர் பட்டியலில், 21 லட்சத்து 39 ஆயிரத்து 395 பேரின் பெயர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. இறப்பு மற்றும் போலி பதிவு உள்ளிட்ட காரணங்களால், 5 லட்சத்து 9 ஆயிரத்து 307 பேரின் பெயர்கள், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. வரும் சட்டமன்றத் தேர்தலில், 18 முதல் 19 வயதுடைய 8 லட்சத்து 97 ஆயிரத்து 694 வாக்காளர்கள், முதல் முறையாக வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 4 லட்சத்து 80 ஆயிரம் பேரும், பெண் வாக்காளர்கள் 4 லட்சத்து 16 ஆயிரம் பேரும் உள்ளனர்.
தமிழகத்தில் அதிகபட்சமாக சோழிங்கநல்லூர் தொகுதியில் 6 லட்சத்து 94 ஆயிரம் வாக்காளர்களும், குறைந்தபட்சமாக சென்னை துறைமுகம் தொகுதியில் 1 லட்சத்து 76 ஆயிரம் வாக்காளர்களும் உள்ளனர். சென்னை மாநகராட்சி ஆணையர் வெளியிட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி, சென்னையில் மொத்தம் 40 லட்சத்து 57 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். ஆண் வாக்காளர்கள் 19 லட்சத்து 95 ஆயிரம் பேரும், பெண் வாக்காளர்கள் 20 லட்சத்து 60 ஆயிரம் பேரும் உள்ளனர். இதேபோல், ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டனர்.