உலகளவில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள் அனைத்தையும் செய்திகளாக வழங்கிவரும் ராய்ட்டர்ஸ் நிறுவனம் தன்னுடைய 170 ஆண்டுக்கால இதழியில் வரலாற்றில் முதல் முறையாக அலெஸாண்ட்ரா கல்லோனி என்பவரை தன்னுடைய செய்தி நிறுவனத்தின் முதல் பெண் தலைமை ஆசிரியராக நியமித்துள்ளது.
உலக நாடுகளில் 2,450 செய்தியாளர்களுடன் பணியாற்றிவரும் ராய்ட்டர் நிறுவனம் பல இடங்களில் தன்னுடைய கிளை அலுவலகங்களை அமைத்துள்ளது. ராய்ட்டர்ஸ் நிறுவனத்தின் தற்போதைய ஆசிரியராக உள்ள ஜே. அட்லர் இந்த மாதத்துடன் முதன்மை ஆசிரியர் பணியிலிருந்து ஓய்வுபெறுகிறார். இவருடைய காலகட்டத்தில் ராய்ட்டர்ஸ் நிறுவனம் ஏராளமான இதழியல் விருதுகளைப் பெற்றுள்ளது. குறிப்பாக ஏழு புலிட்சர் விருதுகளை ஜே. அட்லர் ஆசிரியராக இருந்தபோது ராய்ட்டர்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது.
இந்நிலையில் ரோம் நாட்டில் பிறந்தவரான 47 வயதான அலெஸாண்ட்ரா கல்லோனியை ராய்ட்டர்ஸ் நிறுவனம் முதன்மை ஆசிரியராக நியமித்துள்ளது. அலெஸாண்ட்ரா வரும் 19-ம் தேதி முதல் ராய்ட்டர்ஸ் நிறுவனத்தின் முதன்மை ஆசிரியராக தன்னுடைய பணிகளை அதிகாரபூர்மாக தொடங்கவுள்ளார்.
இவர் ஹார்வேர்டு பல்கலைக்கழகம் மற்றும் லண்டன் பொருளாதார பள்ளியில் பட்டம் பெற்றவர். ஆங்கிலம், இத்தாலி உள்ளிட்ட நான்கு மொழிகளில் பேசும் திறமை கொண்டவர். தற்போது ராய்ட்டர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக ஆசிரியராக பணியாற்றிவரும் அலெஸாண்ட்ரா உலகளவில் உள்ள 200 ராய்ட்டர்ஸ் செய்தியாளர்கள் அவரின் கீழ் பணிபுரிந்து வருகிறார்கள். அலெஸாண்டரா தொடக்கத்தில் ராய்ட்டர்ஸ் நிறுவனத்தில் இத்தாலி செய்தி பிரிவில் செய்தியாளராக தன்னுடைய பணியை கடந்த 2000-ம் ஆண்டு தொடங்கினார். அங்கு 2013-ம் ஆண்டுவரை பணியாற்றிவந்தார்.

தற்போது லண்டனில் வசித்துவரும் அலெஸாண்டரா வணிக செய்தியில் அதீத ஆர்வமுடையவர். இவர் முன்பு வால் ஸ்ட்ரீட் பத்திரிகையில் வணிகம், அரசியல் துறைகளில் ஆழமான அனுபவம் கொண்டவர். கடந்த 2013- ம் ஆண்டு முதல் வால் ஸ்ட்ரீட் பத்திரிகையில் பணியாற்றி அலெஸாண்டரா அங்கு லண்டன், பாரிஸ் மற்றும் ரோம் நாடுகளில் செய்தி ஆசிரியராகவும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.
பின்னர் 2015-ம் ஆண்டுமுதல் ராய்ட்டர்ஸ் நிறுவனத்தில் மீண்டும் பணிக்கு சேர்ந்து தெற்கு ஐரோப்பா மண்டல ஆசிரியராக பணியாற்றிவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
“டிஜிட்டல் மற்றும் வணிகத்தில் ராய்ட்டர்ஸ் நிறுவனத்துப் பங்குகளை ஊக்குவிப்பதே என்னுடைய முதன்மை நோக்கம். நிறுவனத்தின் 170 ஆண்டுக்கால வரலாற்றில் ராய்ட்டர் நிறுவனம் உண்மையான மற்றும் தெளிவான செய்திகளை வழங்குவதில் மக்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ளது. உலகத்தரம் வாய்ந்த செய்தி அலுவலகத்தில் ஏராளமான திறமைகள், அர்ப்பணிப்பு மற்றும் ஊக்கமளிக்கும் பத்திரிகையாளர்களுடன் பணியாற்றுவது எனக்கு பெருமையாக உள்ளது” என ராய்ட்டர்ஸ் நிறுவனம் சார்பில் நடத்தப்பட்ட பதவி அறிவிப்பு நிகழ்ச்சியில் அலெஸாண்டரா தெரிவித்துள்ளார்.







