கார்நடகா மாநிலத்தில் கொரோனா பாதிப்பால் தந்தையை இழந்த 18 வயது மாணவரின் கல்வி செலவுகளை ஏற்றுக்கொள்வதாக சல்மான் கான் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் 2020ஆம் ஆண்டு முதல் கொரோனா தொற்று பரவ தொடங்கி தற்போது பாதிப்பு எண்ணிக்கை உச்சத்தை அடைந்துள்ளது. இதனால் அனைத்து துறையினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் பலருக்கு திரையுலக பிரபலங்கள் பலர் உதவி வருகின்றனர். அதில், முக்கியமானவர் பாலிவுட் நடிகர் சல்மான் கான் பெருந்தொற்றுக் காலத்தில் 25,000-க்கும் மேற்ப்பட்ட திரைத்துறை தொழிலாளர்களுக்கு பல்வேறு உதவிகளைச் செய்துவந்தார். முன்னதாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நடிகை ராக்கி சாவந்தின் அம்மாவுக்கு உதவியுள்ளார்.
மேலும் கொரோனா இரண்டாம் அலையில் கடுமையாகப் பாதிக்கப்பட்ட மாநிலங்கள் பட்டியலில் மகாராஷ்டிராவும் ஒன்று. அம்மாநிலத்தில் உள்ள மருத்துவர்கள், காவல்துறையினர், சுகாதாரப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட முன்கள பணியாளர்கள் மற்றும் வறுமையால் வாடுவோருக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கி உதவி வருகிறார்.
இந்நிலையில், கொரோனா பாதிப்பால் தந்தையை இழந்த கர்நாடகாவைச் சேர்ந்த 18 வயது மாணவர் ஒருவர், டுவிட்டர் பக்கத்தில் உதவி கோரினார். அதனைப் பார்த்த யுவ சேனா தலைவர் ராகுல் கனால், சல்மான் கான் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார். உடனடியாக, அந்த மாணவனுக்குக் கல்விச் செலவு மற்றும் பொருளாதார உதவியை செய்ததோடு எதிர்கால தேவைக்கான உதவிகளையும் செய்வதாக சல்மான் கான் உறுதியளித்துள்ளார்.







