சட்டப்பேரவைத் தேர்தலில் அரங்கேறிய சுவாரசிய தொகுப்பு!

தாத்தாவை தோற்கடித்தவரை வீழ்த்திய பேரன், வியூகம் வகுத்து தோற்கடித்தவரை அதே வியூகத்தால் வென்ற கதை என பல சுவாரசியங்கள், நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அரங்கேறி உள்ளன. அதைப்பற்றி பார்க்கலாம் தாத்தாவை வென்றவரை ,…

தாத்தாவை தோற்கடித்தவரை வீழ்த்திய பேரன், வியூகம் வகுத்து தோற்கடித்தவரை அதே வியூகத்தால் வென்ற கதை என பல சுவாரசியங்கள், நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அரங்கேறி உள்ளன. அதைப்பற்றி பார்க்கலாம்

தாத்தாவை வென்றவரை , தோற்கடித்த பேரன்

நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் , சென்னையில் வில்லிவாக்கம் தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிட்டவர் வெற்றி அழகன் , எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சிகளின் போது சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த ஜேசிடி பிரபாகரனை வென்றுள்ளார்.இந்த தேர்தலில் தோல்வியடைந்த ஜேசிடி பிரபாகரன் 2011 ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் , ஒரு சில தேர்தல்கள் தவிர பெரும்பாலும் தேர்தல் வெற்றிகளையே பெற்றவரும், திமுக பொதுச்செயலாளராகவும், நிதி அமைச்சராகவும் இருந்த பேராசிரியர் அன்பழகனை தோற்கடித்தார். பேராசிரியர் அன்பழகனின் பேரன் தான் வெற்றி அழகன் என்பது குறிப்பிடதக்கது. 10 ஆண்டுகள் கழித்து , 2021 தேர்தலில் வெற்றி அழகன் தாத்தாவை வென்ற ஜேசிடி பிரபாகரனை தோற்கடித்தார். இந்த தேர்தல் வெற்றியின் மூலம் தாத்தாவை வென்றவரை வென்று பேராசிரியர் அன்பழகனின் பெயரை நிலை நிறுத்தியுள்ளார்

அதே வியூகம் /அதே பார்முலா/ தப்பாத கணக்கு


அதிமுகவை சட்டப்பேரவையிலும், வெளியிலும் கடுமையாக , விமர்சித்துக் கொண்டிருந்த திமுகவின் பொன்முடியை வீழ்த்த திட்டமிட்டது அதிமுக தலைமை. அதற்கான வாய்ப்பும் வந்தது. 2011 ஆம் ஆண்டு நடந்த பேரவை தேர்தலில் , விழுப்புரம் தொகுதியில் நான்கு முறை வென்ற திமுக வேட்பாளரும் , அப்போதைய உயர் கல்வி அமைச்சருமான க.பொன்முடியை எதிர்த்து களமிறக்கப்பட்டார், அதிமுக முன்னாள் அமைச்சர் சி வி சண்முகம். அதிமுக தலைமை நினைத்தபடி சி வி சண்முகம் வென்றார். விழுப்புரத்தின் அசைக்கமுடியாத மனிதர் என வலம் வந்த பொன்முடி தோல்வி கண்டு தொகுதி மாறினார். 2016 மற்றும் 2021 தேர்தல்களில் தொகுதி மாறி திருக்கோவிலூரில் போட்டியிட்டு வென்று வருகிறார் பொன்முடி. ஆனாலும் விழுப்புரத்தில் தன்னை தோற்க வைத்த சி வி சண்முகத்தை தேர்தலில் பழி தீர்க்க காத்து கொண்டிருந்தார். 2016 தேர்தலிலும் வென்ற சட்ட அமைச்சர் சி வி சண்முகத்தை, 2021 தேர்தலில் தோற்கடிக்க வியூகம் வகுத்தார் பொன்முடி. ஒரு காலத்தில் அதிமுகவில் மாநிலங்களவை எம்பியாக இருந்து, ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் திமுக வில் இணைந்த மருத்துவர் ஆர்.லட்சுமணன், விழுப்புரம் தொகுதியில் திமுக வேட்பாளராக களமிறக்கப்பட்டார். போட்டி கடுமையாக இருந்தது. இறுதியில் சி வி சண்முகம் , ஆர்.லட்சுமணனிடம் வெற்றியைப்பறி கொடுத்தார் .. 2001 முதல் தொடர்ந்து சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட சி வி சண்முகம் முதல் முறையாக தோல்வியை தழுவியுள்ளார் .

மனம் தளராத நயினார்

2001 ஆம் ஆண்டு பேரவை தேர்தலில் திருநெல்வேலி தொகுதியில் அப்போது சட்டமன்ற உறுப்பினராக இருந்து , மீண்டும் போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஏ. எல். சுப்ரமணியனை குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வென்று அமைச்சரானார் அதிமுகவின் நயினார் நாகேந்திரன்.

பழம்பெரும் திமுக நிர்வாகியான ஏ. எல். சுப்ரமணியனைத் தோற்கடித்ததற்கு பழிவாங்க, திமுக காத்திருந்தது. 2006 ஆம் ஆண்டு தேர்தலில் திமுக வேட்பாளராக போடியிட்ட மாலைராஜாவிடம் , அதிமுக வேட்பாளராக போட்டியிட்ட நயினார் நாகேந்திரன் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றியைப்பறி கொடுத்தார்.

2011 ஆம் ஆண்டு தேர்தலில் நயினார் நாகேந்திரன் , ஏ.எல்.சுப்பிரமணியனின் மகன் ஏ.எல்.எஸ் .லட்சுமணனை வென்றார் . அடுத்து வந்த 2016 தேர்தலில் ஏ.எல்.எஸ் .லட்சுமணன் , நயினார் நாகேந்திரனை தோற்கடித்தார்.

முதலமைச்சராக இருந்த அதிமுக தலைவி ஜெயலலிதா மறைவுக்கு பின் அதிமுகவிருந்து பாஜவுக்கு மாறினார் நயினார் நாகேந்திரன். நடந்து முடிந்த 2021 சட்டப்பேரவை தேர்தலில் பாஜக வேட்பாளராக போட்டியிட்டு, கடந்த தேர்தலில் தன்னை வீழ்த்திய , திமுகவின் ஏ.எல்.எஸ்.லட்சுமணனை வென்றார் நயினார் நாகேந்திரன்.

எப்பவும் தான் ராஜா

காங்கிரஸ் பாரம்பர்யம் மிக்க குடும்பத்தில் பிறந்த அப்பாவு, பள்ளி ஆசிரியராக வாழ்க்கையை தொடங்கினார். திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தொகுதியில் 1996 ல் தமாகா சார்பிலும், 2001 ல் சுயேச்சையாகவும், 2006 ல் திமுக சார்பிலும் வெற்றி பெற்று எம்எல்ஏவாக பணியாற்றியவர். ஆனால் 2016 ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஐ.எஸ்.இன்பதுரையிடம் 49 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியைப்பறி கொடுத்தார் அப்பாவு. அரசியல் சூழ்ச்சியால் தோற்றதாக அறிவிக்கப்பட்டேன், மீண்டும் வாக்குகளை எண்ண வேண்டும் என கோரிக்கை வைத்ததால் ,வாக்கு எண்ணிக்கை மையத்திலிருந்து துணை ராணுவ படையினரால் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தப்பட்டார்.

மீண்டும் வாக்கு எண்னிக்கை கோரி வழக்கும் தொடுத்தார். வழக்கின் தீர்ப்பு வெளியாவதற்கு முன்னறே, அண்மையில் நடந்து முடிந்த 2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் திமுக வேட்பாளராக மீண்டும் போட்டியிட்டு அதிமுகவின் இன்பதுரையை வென்றார் அப்பாவு. நீதிமன்றம் வழங்காத தீர்ப்பை , மக்கள் வாக்குகள் மூலம் வழங்கியுள்ளனர் என பெருமிதத்துடன் கூறினார் அப்பாவு. இப்போது 16 வது சட்டப்பேரவையின் தலைவர்,,,ஆசிரியருக்கு , பதவி உயர்வு தலைமை ஆசிரியர் போல் அப்பாவுக்கு பேரவைத்தலைவர் பதவி…

3 முதல்வர்களிடம் அமைச்சர்


எம்ஜிஆர், ஜெயலலிதா முதலமைச்சர்களாக இருந்த போது முக்கிய துறைகளின் அமைச்சராக இருந்த சு.முத்துசாமி , 2016 ஆம் ஆண்டு தேர்தலில் திமுக வேட்பாளராக போட்டியிட்டார். அவர் அதிமுக வேட்பாளர் கே.வி. ராமலிங்கத்திடம் வெற்றியை பறி கொடுத்தார், தற்போது நடந்து முடிந்த 2021 பேரவை தேர்தலில் , கடந்த தேர்தலில் வென்ற அதிமுக வேட்பாளர் கே.வி.ராமலிங்கத்தை தோற்கடித்து 5 வது முறையாக, சட்டப்பேரவை சென்றுள்ளார். 25 /30 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் அமைச்சராக பதவியேற்றுள்ளார்.எம்.ஜி.ஆர். ஜெயலலிதா அடுத்து மு.க.ஸ்டாலினின் அமைச்சரவையிலும் பங்கெடுக்கிறார்..

சூரியன் உதிக்காத பெருந்துறை


ஈரோடு மாவட்டம் பெருந்துறை தொகுதியில் திமுக, இதுவரை ஒரு முறை கூட வெற்றி பெற்றதில்லை, இத்தொகுதியை கூட்டணிக்கட்சிகளுக்கு ஒதுக்கி விடும் . இம்முறை கூட்டணி கட்சியான கொங்கு நாடு மக்கள் தேசியக்கட்சியானது திமுகவின் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்டது. இம்முறை எப்படியும் பெருந்துறை தொகுதியில் உதயசூரியன் உதிக்கும் என திமுக கூட்டணியினர் பெரிதும் எதிர்பார்த்தனர். ஆனால் இம்முறையும் அதிமுகவே வென்றது.

அப்போ இல்லை , இப்போ எம்.எல்.ஏ


2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் நாங்குநேரி தொகுதியில் போட்டியிட்ட ,தமிழ்நாடு காங்கிரஸ் மூத்த தலைவர் எச்.வசந்தகுமார் வெற்றி பெற்றார். 2019 ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் , கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டு மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார் .ஆகவே தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார். 2019 ஆம் ஆண்டு நாங்குநேரி தொகுதியிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில், காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்ட ரூபி மனோகரன் ,அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணனிடம் வெற்றி வாய்ப்பை இழந்தார். தற்சமயம் நடைபெற்ற 2021 தேர்தலில் அதிமுகவின் தச்சை கணேசராஜாவை வென்றார். காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்ட ரூபி. மனோகரன்..

30 ஆண்டுகளுக்கு பின் கைநழுவிப்போன சங்கரன் கோவில்

1996 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அதிமுக கூட்டணி படு தோல்வி அடைந்தது. முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா உட்பட அமைச்சர்கள் அனைவரும் தோல்வி அடைந்தனர். ஆனாலும் ஆறுதலாக சங்கரன் கோவில், ராசிபுரம், ஸ்ரீவில்லிபுத்தூர் , அறந்தாங்கி ஆகிய 4 தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.சங்கரன் கோவில் தொகுதி 1991 லிருந்து தொடர்ந்து அதிமுக வசமே இருந்து வந்தது. இந்நிலையில் 2021 சட்டப்பேரவை தேர்தலில் , அதிமுகவிடமிருந்து , இத்தொகுதியை திமுக கைப்பற்றியுள்ளது. அதிமுக வேட்பாளர் அமைச்சர் ராஜலட்சுமியை , திமுக வேட்பாளர் ராஜா தோற்கடித்துள்ளார். ராசிபுரத்தில் அமைச்சராக இருந்த மருத்துவர் சரோஜா , திமுக வேட்பாளர் மதி வேந்தனிடம் வெற்றி வாய்ப்பை இழந்தார். அறந்தாங்கி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் களமிறங்கிய திருநாவுக்கரசரின் மகன் ராமச்சந்திரன் , அதிமுகவின் ராஜநாயகத்தை வென்றார். ஆறுதலாக ஸ்ரிவில்லிபுத்தூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் மான்ராஜ் , காங்கிரசின் மாதவராவை வென்றார். மாதவராவ், வாக்குப் பதிவு முடிந்த பிறகு, தேர்தல் முடிவுகள்வெளிவரும் முன்பே கொரோனா தொற்றால் காலமானார்.

சலசலப்புக்கு அஞ்சாதவர்

ஆலங்குளம் தொகுதியில் திமுக வேட்பாளாராக சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தவரும் ,முன்னாள் அமைச்சருமான பூங்கோதை ஆலடி அருணாவும், , அதிமுக சார்பில் மனோஜ் பாண்டியனும், பனங்காட்டு படை கட்சி சார்பில் ஹரி நாடாரும் போட்டியிட்டனர். மூன்றாம் இடத்தை பிடித்த ஹரி நாடார் , 37,727 வாக்குகளைப் பெற்று அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். மீண்டும் வெற்றி பெற்று , பேரவை சென்று மீண்டும் அமைச்சராவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திமுக வேட்பாளர் பூங்கோதை ஆலடி அருணா அதிர்ச்சி தோல்வி அடைந்தார். அதிமுகவின் மனோஜ் பாண்டியன் வெற்றி பெற்றார்.. அ.தி.மு.க. வேட்பாளர் மனோஜ் பாண்டியன் 74,153 வாக்குகளும், தி.மு.க. வேட்பாளர் பூங்கோதை ஆலடி அருணா 70,614 வாக்குகளும் பெற்றனர். இருவருக்கும் இடையேயான வாக்கு வித்தியாசம் 3,539 மட்டுமே . இந்த தேர்தலில் ஆலங்குளத்திலும் அதிகமாக பேசப்பட்டவர் ஹரி நாடார் மட்டுமே..

இப்படி பல்வேறு வியூகங்களும், விநோதங்களும் 16வது சட்டப்பேரவைத் தேர்தல் முடிவில் வெளிப்பட்டுள்ளன.

தங்கபாண்டியன் , நியூஸ் 7 தமிழ்…

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.