முக்கியச் செய்திகள் கட்டுரைகள் தமிழகம்

தமிழக முதல்வர்களின் முக்கிய கையெழுத்துகள்!


எல்.ரேணுகா தேவி

கட்டுரையாளர்

தமிழக முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய முதல் கையெழுத்தாக கொரோனா கால நிவாரணமாக ரூ.4000 வழங்கும் திட்டம் உள்ளிட்ட 5 திட்டங்களுக்கு கையெழுத்திட்டுள்ளார். அந்த வகையில் தமிழக முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் கையெழுத்துயிட்ட முக்கிய திட்டங்களும் சாதனைகளின் தொகுப்பை பார்க்கலாம்.

கல்வி சாலைகள் திறந்த காமராஜர்

விடுதலைக்கு பிறகு மொழி வழியில் தமிழகம் பிரிக்கப்பட்ட பிறகு 1957 -ல் முதல்வராக கு.காமராஜர் தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். நிதிநிலையைக் காரணம் காட்டி மூடப்பட்ட ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகளைத் திறந்தார்.

விடுதலைக்கு பிறகான தேசத்தின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு கிராமங்கள் வரை ஆயிரக்கணக்கான புதிய பள்ளிகளைத் திறந்ததோடு வருங்கால தொழில் வளர்ச்சியைக் கருத்தில்கொண்டு தொழிற்கல்வி நிலையங்களைத் திறந்தார்.

தமிழகம் கல்வி துறையில் சிறந்து விளங்குகிறதென்றால் அதற்குக் காமராஜரின் கல்விப்பணியே அடித்தளமாகும். தமிழகத்தில் நிறைந்திருந்த இயற்கை வளங்களைக் கணக்கில் கொண்டு, தேசிய அரசியலில் தனக்கு இருந்த செல்வாக்கையும் பயன்படுத்தி புதிய அணைகளைக் கட்டுவதற்கும் தொழிற்சாலைகள் அமைப்பதற்கும் வழிவகை செய்தார்.

காமராஜருக்குப் பிறகு முதல்வரான எம்.பக்தவசலம் இந்து சமய அறநிலையத்துறையின் திருக்கோவில்களின் நிதியைக் கல்வி போன்ற சமூக நலத்திட்டங்களுக்குப் பயன்படுத்தும் வகையில் சட்டத்திருத்தத்தைக் கொண்டுவந்தார்.

எங்கும் தமிழ் எதிலும் தமிழ்

அடுத்து ஆட்சிப்பொறுப்பிற்கு வந்த அண்ணா மொழி உரிமை மற்றும் மாநில உரிமைகளை நிலை நிறுத்தும் வகையில் செயலாற்றினார். அவர் ஆட்சிப்பொறுப்பிற்கு வரும் வரை தமிழகம் ‘மெட்ராஸ் மாகாணம்’ என்றே அழைக்கப்பட்டு வந்தது. அதற்குத் தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்தார். அதுவரை கவர்ன்மென்ட் ஆஃப் மெட்ராஸ் என்று அழைக்கப்பட்டு வந்ததைத் தமிழ்நாடு அரசு என்று மாற்றினார்.

பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலிருந்து புனித ஜார்ஜ் கோட்டை என்ற அடையாளத்தை மட்டும் கொண்டிருந்த இடத்தில் “தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம்” என்று பெயர் பலகை வைத்தார். அரசு சின்னத்தில் ‘சத்யமேவ ஜெயத்தே’ என்று இருந்த வடமொழிச் சொல்லை ‘வாய்மையே வெல்லும்’ என்று மாற்றினார்.

சாதி மறுப்பு மற்றும் சடங்கு மறுப்பு திருமணத்தை அங்கீகரிக்கும் வகையில் சுயமரியாதை திருமணத்திற்குச் சட்ட அங்கீகாரம் வழங்கப்பட்டது. இந்தி திணிப்பை எதிர்க்கும் வகையில் இருமொழி கொள்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது. பேருந்துகள் அரசுடைமையாக்கப்பட்டது எனப் பலவேறு முற்போக்கு திட்டங்களையும் அண்ணா கொண்டு வந்தார்.

மாநில சுயாட்சி தீர்மானத்தை நிறைவேற்றியவர்

அடுத்து முதல்வராக வந்த மு.கருணாநிதி அண்ணாவின் வழியில் மாநில உரிமைகளை வலியுறுத்தி வந்தார். மத்திய மாநில உறவுகளை ஆய்வதற்கு ராஜமன்னார் தலைமையிலான குழு ஒன்றை அமைத்தார். அந்த அறிக்கையின் அடிப்படையில் 1973 –ம் ஆண்டு மாநில சுயாட்சி தீர்மானத்தைத் தமிழகச் சட்டமன்றத்தில் நிறைவேற்றினார். விடுதலைக்குப் பிறகு இக்காலைப்பகுதியில்தான் காங்கிரஸ் அல்லாத கட்சிகள் பல மாநிலங்களில் ஆட்சிப் பொறுப்பேற்றிருந்தனர். இது அம்மாநிலங்களுக்கு ஒரு முன் உதாரணமாக அமைந்தது.

அரசு பணிகளில் பெண்களுக்கு 30 சதம் இட ஒதுக்கீடு, விதவைகள் மறுமணம், சாதி மறுப்பு திருமணத்திற்கு உதவித் தொகை, குடிசை மாற்று வாரியம் அமைத்தது, சொத்தில் பெண்களுக்கு உரிமை, சமச்சீர்க் கல்வி உள்ளிட்டவை கருணாநிதியின் ஆட்சிக் காலங்களில் நடைபெற்றது.

மகளிர், மாணவர்களுக்கான திட்டம்

எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் பள்ளிகளில் வழங்கப்பட்ட சத்துணவுத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டதோடு விலையில்ல பாடநூல், சீருடை, உள்ளிட்ட திட்டங்களைக் கொண்டு வந்தார். தாய்,சேய் நல இல்லங்களை உருவாக்கியதோடு பெண்கள் நலன் சார்ந்த திட்டங்களை அமலாக்கினார். வறட்சியான காலத்தில் லாரிகள் மூலம் சம்மந்தப்பட்ட பகுதிக்கு தண்ணீர் கொண்டு செல்லும் ஏற்பாடு இந்தக்காலத்தில்தான் நடந்தது. பூரண மது விலக்கை அறிவித்தார். மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீட்டை அமலாக்கினார்.

தொட்டில் குழந்தை திட்டம்

ஜெ.ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் பெண் சிசுக்கொலையை தடுக்கும் வகையில் தொட்டில் குழந்தை திட்டத்தை 1992 –ல் அமலாக்கினார். குறிப்பாகப் பெண் சிசுக்கொலை அதிகமாக நடந்துவந்த சேலம், மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இத்திட்டம் பல பிஞ்சுக் குழந்தைகளைக் காப்பாற்றியது. இது பெண் சிசுக்கொலையை வெகுவாக குறைத்தது. பெண்களுக்கென தனியாக மகளிர் காவல் நிலையங்கள், பெண்கள் மட்டுமே உள்ள சிறப்புப் பெண்கள் ஆயுதப்படை உருவாக்கினார். லாட்டரி சீட்டு விற்பனையைத் தடை செய்தார்.

தமிழகத்தின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு தடை செய்யப்பட்டதை எதிர்த்து தமிழகதில் பெரிய அளவில் போராட்டம் வெடித்ததை அடுத்து ஜல்லிக்கட்டை மீண்டும் நடத்துவதற்கான ஏற்பாட்டை ஓ.பன்னீர் செல்வம் ஆட்சியில் இருந்தபோது செய்தார்.

மத்திய அரசு கொண்டு வந்த நீட் தேர்வின் காரணமாக அரசுப் பள்ளியில் படித்த மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேருவது குறைந்தது. அதையடுத்து அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 சதம் இட ஒதுக்கீட்டை எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தது வரவேற்பைப் பெற்றது.

கல்வி, சுகாதாரம், தொழில் வளர்ச்சி, தொழில்நுட்ப திறன் என எல்லா வகையிலும் தமிழகம் முன்னேற்றம் பெற்று நிற்கிறது. பொருளாதார வளர்ச்சியோடு சமூக நீதியை உள்ளடக்கிய சமூக நல திட்டங்களை தமிழகத்தை ஆண்டவர்கள் செய்ததன் விளைவே தமிழகத்தின் வளர்ச்சிக்கு காரணமாகும்.

மு.க.ஸ்டாலினின் முதல் கையெழுத்து

இந்த சாதனை திட்டங்கள் தொடரும் வகையில் தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலின் கொரோனா கால நிவாரணமாக ரூ.4000 வழங்கும் திட்டம், ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.3 குறைப்பு, அனைத்து மகளிரும் கட்டணமில்லாமல் பேருந்து பயணம், மக்களின் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ திட்டம் மற்றும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனை சிகிச்சைக்கான கட்டணத்தை தமிழக அரசே காப்பீடுத் திட்டத்தின் கீழ் ஏற்கும் திட்டம் என தன்னுடைய முதல் கையெழுத்தாக 5 முக்கிய திட்டங்களுக்கு கையெழுத்திட்டுள்ளார்.

Advertisement:
SHARE

Related posts

கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிக்கும் : மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்

Halley karthi

17 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தவருக்கு மரண தண்டனை!

Halley karthi

தமிழகத்தில் தடுப்பூசி வீணாக்கப்படவில்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

Halley karthi