கொரோனா 2ம் அலை பரவ தேர்தல் காரணமாக அமைந்துவிட்டதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தேர்தலை நடத்த உத்தரவிட வேண்டுமென மதுரையைச் சேர்ந்த ரமேஷ் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினை தாக்கல் செய்தார். அதில், “மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகியவற்றிற்கான தேர்தல் 21 முறை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கொரோனா விதிமுறைகளை பின்பற்றி தேர்தல்களை நடத்த வேண்டும்” என தெரிவிக்கப்பட்டது.
இந்த மனு நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழகத்தில் கொரோனா 2ம் அலை உருவாவதற்கு காரணமாக தேர்தல் அமைந்துவிட்டதாக தெரிவித்த நீதிபதிகள், “மீண்டும் தேர்தல் அறிவிப்புகளை வெளியிட்டு தேர்தல் பிரச்சாரங்களில் கட்சியினர், பொதுமக்கள் ஈடுபட்டால் கொரோனா பரவ வாய்ப்பாக அமைந்துவிடும்” என்று சுட்டிக்காட்டினர்.
மேலும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தேர்தல் சம்பந்தமாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருவதாகவும், அதன் தீர்ப்பு வெளிவந்த பின்னர் இந்த வழக்கு விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்படும் என தெரிவித்தனர். வழக்கு விசாரணையும் தேதி குறிப்பிடப்படாமல் தள்ளிவைக்கப்பட்டது.







