ஆக்சிஜன் 90-க்கு மேல் இருந்தால் அனுமதியில்லை: தமிழக அரசு

கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு வருபவர்களின் ஆக்சிஜன் அளவு 90 அல்லது 94-ஆக இருந்தால் அவர்களுக்கு அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் அனுமதியில்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக…

கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு வருபவர்களின் ஆக்சிஜன் அளவு 90 அல்லது 94-ஆக இருந்தால் அவர்களுக்கு அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் அனுமதியில்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசின் மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று சிகிச்சை முறை குறித்த புதிய வழிகாட்டு நெறிமுறைகளில் வெளியிட்டுள்ளது.
அதில், “ புதிய வழிகாட்டு நெறிமுறைகளின்படி கொரோனா நோய் தொற்றால் ஒருவர் பாதிக்கப்படுகிறார் என்றால் அவர்கள் முதலில் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் கொரோனா சிகிச்சை மையத்தை அணுகவேண்டும். அங்கு அவர்களின் உடல்நிலை முதற்கட்டமாகப் பரிசோதனைச் செய்யப்படும்.

இந்த பரிசோதனையின்போது கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவரின் உடலில் ஆக்சிஜன் அளவு 90 அல்லது 94-ஆக இருப்பின் அவர்கள் மருத்துவர்களின் வழிகாட்டுதலின்படி மாத்திரைகள் எடுத்துக்கொண்டு வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளவேண்டும்.

வீட்டுத் தனிமையில் இருக்கும்போது ஆக்சிஜன் அளவு மாறுபட்டால் உடனடியாக அருகில் உள்ள ஆரம்ப சுகாதா நிலையம் அல்லது கொரோனா சிகிச்சை மையத்தை அணுகவேண்டும். பின்னர் அங்குள்ள மருத்துவர்களின் பரிசோதனைக்குப் பின்னர் அளிக்கும் பரிந்துரையின்படி மருத்துவ சீட்டை எடுத்துக்கொண்டு மாவட்ட மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவார்கள்.

ஆக்சிஜன் அளவு 90, 94 உள்ளவர்களை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கக்கூடாது. கொரோனா நோய் தொற்றால் தீவிரமாகப் பாதிக்கப்பட்டு ஆக்சிஜன் அளவு 90 கீழ் சென்றால் மட்டுமே நோயாளிகளை மருத்துவமனையில் அனுமதிக்கவேண்டும். ஆக்சிஜன் அளவு சீராக இருந்தும் பெரும்பாலான மக்கள் அச்சத்தின் காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுகிறார்கள்.

இதன்காரணமாக கொரோனாவால் தீவிரமாகப் பாதிக்கப்படும் ஒருவருக்கு அவசர தேவைக்குக்கூட மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கை வசதி கிடைப்பதில்லை. இதனைத் தவிர்க்கும் விதமாக தமிழக அரசு இந்த புதிய கொரோனா சிகிச்சை வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது” என செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.