எந்தக் காலத்திலும் மு.க.ஸ்டாலின் முதல்வராக வர முடியாது என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னை கண்ணகி நகரில் எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதில் பேசிய அவர், திமுகவை அப்புறப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே அதிமுக உருவாக்கப்பட்டது என தெரிவித்தார். எந்த கொம்பனாலும் அசைக்க முடியாத எஃகு கோட்டையாக அதிமுகவை ஜெயலலிதா உருவாக்கி கொடுத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
அதிமுகவில் சாதாரண தொண்டனாக இருப்பதே நமக்கெல்லாம் பெருமை என்ற நிலையை எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் உருவாக்கி தந்திருக்கிறார்கள் என குறிப்பிட்டுள்ளார். அதிமுகவில் யாரும் ரவுடித்தனம் செய்வதில்லை, அடாவடித்தனம் செய்வதில்லை என தெரிவித்துள்ளார்.
10 ஆண்டுகளாக மக்களின் வெறுப்பை பெறாத நல்லாட்சியாக அதிமுக ஆட்சி உள்ளது என்று பெருமிதம் தெரிவித்தார். எந்தக் காலத்திலும் ஸ்டாலின் முதல்வராக வரவே முடியாது என்றும், பதவி சுகத்துக்காக தமிழகத்தின் உரிமைகளை பறிகொடுத்த கட்சி திமுக என்றும் விமர்சனம் செய்துள்ளார்.







