குஜராத் அரசு டிராகன் பழத்திற்கு ‘கமலம்’ என பெயர் மாற்றம் செய்துள்ளது.
டிராகன் பழத்தின் பெயர் சீனாவுடன் தொடர்புடையதால் அதனை மாற்ற முடிவெடுத்ததாக குஜராத் முதல்வர் விஜய் ரூபானி தெரிவித்துள்ளார். இந்தப் பழத்தின் வெளிப்புறத் தோற்றம் தாமரை போல் இருப்பதால் அதற்கு ‘கமலம்’ என பெயரிட்டுள்ளதாக குஜராத் அரசு அறிவித்துள்ளது. கமலம் என்ற வார்த்தைக்கு தாமரை என்று பொருள்.

இந்தியாவில் கடந்த சில மாதங்களாக அதிகம் பிரபலமாகி வரும் பழங்களில் டிராகன் பழமும் ஒன்று. அதனால் இந்த வார்த்தையும் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில்தான் குஜராத் அரசு இதன் பெயரை மாற்ற முடிவெடுத்ததாக கூறப்படுகிறது. சீனாவுடன் எல்லைப் பிரச்னை இருந்து வரும் நிலையில், சீன தயாரிப்புகளை பயன்படுத்துவதை மக்கள் படிப்படியாக குறைத்து வருவது குறிப்பிடத்தக்கது.







