முதல்முறையாக கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடி ஏற்றினார்.
நாடு முழுவதும் இன்று 75வது சுதந்திர தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. பிரதமர் மோடி செங்கோட்டையில் 21 குண்டுகள் முழங்க தேசிய கொடி ஏற்றினார். தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்றபின் முதல்முறையாக மு.க.ஸ்டாலின் கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடி ஏற்றினார். முன்னதாக திறந்த ஜீப்பில் நின்றபடி காவல் துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
இதைத்தொடர்ந்து, இந்திய நாட்டின் மூவர்ணக் கொடியை ஏற்றி வைக்க, உயிரையும் ரத்தத்தையும் வாழ்க்கையும் அர்ப்பணித்த இந்தியர்கள் அனைவருக்கும் எனது வீரவணக்கம் என தனது சுதந்திர உரையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விடுதலைப் போராட்ட தியாகிகளுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத் தொகை ரூ.17,000த்தில் இருந்து ரூ.18,000 ஆக உயர்த்தப்படும் என தெரிவித்தார்.
தொடர்ந்து உரையாற்றிய அவர், மாட்சிமை பொருந்திய கோட்டையில் விண்முட்ட அமைந்துள்ள கம்பத்தில் கொடியேற்றும் வாய்ப்பினை வழங்கிய தமிழ்நாட்டு மக்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த நன்றி கலந்த வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன். சுதந்திர தின தூண் வெறும் கல்லாலும் சிமெண்டாலும், செங்கல்லாலும் கட்டப்பட்டது அல்ல; விடுதலைப் போராட்ட வீரர்களின் இரத்தத்தால், எலும்பால், சதையால் உருவாக்கப்பட்டது என பெருமிதம் பொங்க தெரிவித்தார்.
சமூகம்-அரசியல்-பொருளாதாரம் ஆகிய மூன்றிலும் தமிழ்நாடு ஒருசேர வளர வேண்டும் என்பதுதான் நம்முடைய கனவு; அதனை நிறைவேற்ற அரசு பாடுபட்டு வருகிறது. கொரோனாவிலிருந்து மக்களை மீட்டெடுக்கும் முயற்சிக்கு அடித்தளமான மருத்துவர்கள், செவிலியர்கள், முன்களப் பணியாளர்களை பாராட்ட கடமைப்பட்டுள்ளேன்; இந்தளவுக்கு மக்கள் மீண்டு வர உங்களது அர்ப்பணிப்பு தான் காரணம் என கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துகள்; வாழ்க தமிழ்நாடு, வாழ்க இந்தியா” எனக் கூறி சுதந்திர தின உரையை நிறைவுசெய்தார். பின்னர் பல்வேறு சிறப்பாக செயலாற்றியவர்களுக்கு விருதுகளும் வழங்கினார்.

அதன்பின், சென்னை சிவானந்தா சாலையில் உள்ள சுதந்திர தின நினைவுத் தூணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.








