சுதந்திர தினத்தையொட்டி, டெல்லி செங்கோட்டையில், பிரதமர் தேசியக் கொடியை ஏற்றினார்.
கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் நாட்டின் 75 வது சுதந்திர தினம், நாடு முழுவதும் கட்டுப்பாடுகளுடன் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. சுதந்திர தினத்தையொட்டி, பிரதமர் மோடி டெல்லியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர், செங்கோட்டைக்கு வந்த பிரதமர், 21 குண்டுகள் முழங்க தேசிய கொடியை ஏற்றினார். இந்த விழாவில் மத்திய அமைச்சர்கள், வெளிநாட்டு தூதர்கள், நீதிபதிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும், இந்தியா சார்பில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக அனைவரும் சமூக இடைவெளியுடன் அமர வைக்கப்பட்டிருந்தனர்.
இதைத்தொடர்ந்து, ”சுதந்திர தினத்தில் கொரோனாவுக்கு எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவ பணியாளர்கள், முன்கள பணியாளர்கள், மருத்துவர்கள் என அனைவருக்கும் வணக்கங்கள் என தனது உரையை தொடங்கிய பிரதமர் மோடி, ஒலிம்பிக்கில் கலந்துகொண்டு சிறப்பாக செயல்பட்ட நமது விளையாட்டு வீரர்களை பாராட்டுவோம்; சிறப்பாக விளையாடிய அவர்கள், தேசத்தின் பெருமையை ஒலிம்பிக்கில் நிலைநாட்டினர் என பெருமிதம் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து பேசிய அவர், “நாட்டில் இதுவரை 54 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது; உலகிலேயே மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் இந்தியாவினுடையது. நாம் வளர்ச்சியை நோக்கி சென்றுகொண்டிருக்கிறோம்; அடுத்த 25 ஆண்டுகளுக்கான தொலைநோக்கு திட்டம் உள்ளது, புதிய இந்தியாவை சிறப்பாக கட்டமைக்க கடுமையான உழைப்பு தேவைப்படுகிறது என தெரிவித்தார்.








