விடுதலைப் போராட்ட வீரரும் அரசியல் நிர்ணயசபை உறுப்பினருமான டி.எம்.காளியண்ணன் மறைவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இந்திய விடுதலைப் போராட்ட வீரரும், அரசியல் நிர்ணயசபை உறுப்பினருமான டி.எம்.காளியண்ணன் தமது 101 வது வயதில் காலமான செய்தி கேட்டு மிகுந்த வருத்தமும் துயரமும் அடைந்தேன். தமிழக காங்கிரஸ் கமிட்டியின் துணைத்தலைவராக, பொருளாளராக பதவி வகித்து பெரும்பணியாற்றியவர். நாடாளுமன்ற, சட்டமன்ற, சட்ட மேலவைகளில் அங்கம் வகித்து ஆக்கப்பூர்வமான கருத்துக்களை கூறி காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக அரும் பணியாற்றியவர்.
காந்தியடிகளின் கொள்கைகளை பின்பற்றி பெருந்தலைவர் காமராஜரின் அடியொற்றி பயணித்தவர் டி.எம்.காளியண்ணன். பொதுவாழ்க்கையில் எளிமையாக, நேர்மையாக, துணிவுடன் கருத்துக்களை கூறுபவராக விளங்கியவர். இவரது மறைவு காங்கிரஸ் இயக்கத்திற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். டி.எம்.காளியண்ணன் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், காங்கிரஸ் நண்பர்களுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
டாக்டர் ராமதாஸ் இரங்கல்:
பாமக நிறுவனர் ராமதாஸ் ட்விட்டரில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், இந்திய விடுதலைப் போராட்ட வீரரும், அரசியல் நிர்ணய அவையின் உறுப்பினருமான டி.எம்.காளியண்ண கவுண்டர் காலமான செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் உள்ளிட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல் மற்றும் அனுதாபங்கள் என்று தெரிவித்துள்ளார்.







