முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

டி.எம்.காளியண்ணன் மறைவுக்கு தமிழக முதல்வர் இரங்கல்!

விடுதலைப் போராட்ட வீரரும் அரசியல் நிர்ணயசபை உறுப்பினருமான டி.எம்.காளியண்ணன் மறைவுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள இரங்கலில் கூறியிருப்பதாவது:

இளம் வயதில் இந்திய அரசியல் நிர்ணயசபை உறுப்பினராக இருந்தவரும், காங்கிரஸ் பேரியக்கத்தின் பழம்பெரும் தலைவருமான திருச்செங்கோடு டி.எம்.காளியண்ண கவுண்டர் தனது 101-ஆவது வயதில் மறைவெய்தினார் என்ற வேதனை மிகுந்த செய்தியறிந்து ஆழ்ந்த வருத்தமுற்றேன். அவரது மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னை லயோலா கல்லூரி வாழ்க்கையின் போதே இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்ட அவர் – மகாத்மா காந்தியுடன் வார்தா ஆசிரமத்திற்குச் சென்று 12 நாட்கள் தங்கியிருந்தவர். காந்தியின் கொள்கைகளால் கவரப்பட்டு – அவரது அறிவுரையின் பேரில் பச்சையப்பன் கல்லூரியில் தனது கல்லூரிப் படிப்பைத் தொடர்ந்த அவர், தன்னை ஒரு காந்தியவாதியாக மாற்றிக் கொண்டு எளிமையின் இலக்கணமாக இறுதிவரை வாழ்ந்தவர். மக்களாட்சி மாண்புகளின் மீது மிகப்பெரிய நம்பிக்கை கொண்டிருந்த அவர் – கஸ்தூரிப்பட்டி ஜமீன்தாராக அழைக்கப்பட்ட போதும் – ஜமீன்தார் ஒழிப்புச் சட்டத்திற்கு சட்டமன்றத்தில் ஆதரவளித்து – வாக்களித்து, ஜமீன் முறை ஒழிப்பிற்குத் தனது முழு ஒத்துழைப்பை அளித்த மாபெரும் சீர்திருத்தவாதி அவர்.

காங்கிரஸ் பேரியக்கத்தின் வளர்ச்சிக்காக அயராது பாடுபட்ட அவர்- தமிழக மேலவை உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர் என பல்வேறு பதவிகளில் இருந்து மக்களுக்குச் சேவை புரிந்தவர். தனது நூற்றாண்டு வாழ்வில் மக்கள் தொண்டே என் பணி என்று ஒன்றுபட்ட சென்னை மாகாணத்திற்கும், தமிழ்நாட்டிற்கும் – ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் அரும்பணியாற்றிய காளியண்ணக் கவுண்டரின் மறைவு தமிழகத்திற்கும், நாட்டிற்கும் பேரிழப்பு. அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள், காங்கிரஸ் இயக்கத் தொண்டர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் – அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு முதல்வர் வெளியிட்ட இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement:

Related posts

வாத்தி கம்மிங் படைத்த புதிய சாதனை; இணையத்தில் கொண்டாடும் ரசிகர்கள்

Saravana Kumar

ஜம்மு காஷ்மீரின் முதல் பெண் பேருந்து ஓட்டுனர்!

Jeba

கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்களுக்கு கடனுதவி!

Karthick