கோவையில் தொற்று அதிகரித்து வருவது என்ன காரணம் என்பது குறித்து சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலளித்துள்ளார்.
தமிழகத்தில் நாள்தோறும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். வழக்கமாக அனைத்து மாவட்டங்களையும் விட மக்கள் நெருக்கம் அதிகமுள்ள சென்னையில்தான் அதிக பாதிப்புகள் பதிவாகும். ஆனால், கடந்த இரண்டு நாட்களாக சென்னையை விட கோவையில் அதிகமானோருக்கு கொரோனா தொற்று பதிவாகி வருகிறது. சென்னையில் நேற்று கொரோனா பாதிப்பு குறைந்து 2, 779 பேருக்கு மட்டுமே பதிவான நிலையில், கோவையில் 4,734 பேருக்கு பாதிப்பு உறுதியானது.
இந்த நிலையில் நியூஸ் 7 தமிழுக்கு பேட்டியளித்த சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், கோவையில் கொரோனா பரிசோதனையை அதிகப்படுத்தியுள்ளோம், தன்னார்வலர்கள் உதவியோடு கூடுதல் படுக்கை வசதிகளை தயார்படுத்தி வருகிறோம், யாரும் பயப்படத் தேவையில்லை என்று கூறினார்.
மேலும், “கோவையில் வடநாட்டு தொழிலாளர்களை வைத்து யாருக்கும் தெரியாமல் தொழிற்சாலையை இயக்கி வருகிறார்கள். இதுதான் தொற்று அதிகரிப்பதற்கு ஒரு காரணம். அதுபோன்று செயல்படும் ஆலைகளைக் சோதனை செய்து சீலிட அறிவுறுத்தியுள்ளோம்” என்று தெரிவித்தார்.
மேம்பால பணிகளில் ஈடுபடுவர்களை பணிகள் மேற்கொள்ள கூடாது என்று அறிவுறுத்தியுள்ளதாகவும், நாளை முதல் கோவையில் முழு ஊரடங்கு கடுமையாக இருக்கும் எனவும், சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் தான் தடுப்பூசியை அதிகப்படுத்தியுள்ளோம், மேலும் அதிகரிக்கச் செய்வோம் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.







