திருப்பூர் : கொலை வழக்கு விசாரணையில் மற்றொரு சடலம் மீட்பு – போலீசார் அதிர்ச்சி

திருப்பூர் அருகே கருகிய நிலையில் ஆண் சடலம் மீட்கப்பட்ட வழக்கில் மேலும் ஒரு சடலத்தை போலீசார் கண்டுபிடித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   திருப்பூர் அருகே திருமுருகன்பூண்டி பொங்குபாளையம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் நேற்று…

திருப்பூர் அருகே கருகிய நிலையில் ஆண் சடலம் மீட்கப்பட்ட வழக்கில் மேலும் ஒரு சடலத்தை போலீசார் கண்டுபிடித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

திருப்பூர் அருகே திருமுருகன்பூண்டி பொங்குபாளையம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் நேற்று கருகிய நிலையில் சடலம் கிடந்துள்ளது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் வேலம்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தியபோது, எரிந்த நிலையில் கிடந்தது ஆண் சடலம் என கண்டுபிடித்தனர்.

 

பின்னர் மோப்ப நாய் உதவியுடன் விசாரணை தொடங்கினர். அப்போது, அங்குள்ள சிசிடிவி கேமிராவை பார்த்தபோது, நேற்று இரவு இருசக்கர வாகனத்தில் மூட்டையுடன் வந்த மர்ம நபர் ஒருவர் மூட்டையை அங்கே போட்டு விட்டு திரும்பி செல்வது பதிவாகியுள்ளது. எனவே, கொலை செய்யப்பட்டு உடலை எரித்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், சிசிடிவி கேமிராக்களை தொடர்ந்து ஆய்வு செய்து பெருமாநல்லூர் சாலை, குமரன் காலனியில் உள்ள வீட்டை போலீசார் கண்டுபிடித்தனர். பின்னர் அங்கு சென்று பார்த்தபோது வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியது. சந்தேகத்தின் பேரில் போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது, வீட்டினுள் சடலம் புதைக்கப்பட்டதாக அறிகுறிகள் தென்பட்டன. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் சடலத்தை தோண்டி எடுப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

 

இதையடுத்து, போலீஸ் கமிஷனர் பிரபாகரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். நேற்று கருகிய நிலையில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்ட வழக்கில், மேலும் ஒரு சடலம் கண்டுபிடிக்கப்பட்டது போலீசாரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

– இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.