திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நல்லதங்காள் அணை கட்ட நிலம் வழங்கியும் அதற்கு இழப்பீடு வழங்காத அரசை கண்டித்து விவசாயிகள் நடத்திவரும் போராட்டம் 5-வது நாளை எட்டியுள்ளது. இந்நிலையில் மனிதருக்கும், நாய்க்கும் மாலை மாற்றி நூதன முறையில் போராடி வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த பொன்னிவாடி கிராமத்தில் நல்லதங்காள் ஒடையின் குறுக்கே அணை கட்டப்பட்டுள்ளது.இந்த அணை கட்டுவதற்கு கடந்த 1997ம் ஆண்டு 150 விவசாயிகளிடமிருந்து சுமார் 850 ஏக்கர் விவசாய நிலம் கையகப்படுத்தப்பட்டது.
அணையின் கட்டுமான பணிகள் 2000ம் ஆண்டில் தொடங்கி முடிவுற்றது.நிலத்தை கையகப்படுத்தியும் அரசு விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கவில்லை.இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கடந்த 2003ம் ஆண்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதுதொடர்பான விசாரணை பல கட்டங்களாக நடந்து வந்த நிலையில் 2019ம் ஆண்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இருந்தபோதிலும் பொதுப்பணித்துறை சார்பில் இழப்பீடு வழங்காமல் காலம் தாழ்த்தி வந்தது.இதனையடுத்து நீதிமன்றம் கோட்டாச்சியர் அலுவலக மற்றும் கிராம நிர்வாக அலுவலக பொருட்களை ஜப்தி செய்ய உத்தரவிட்டிருந்தது.இதன்பின்னரும் இழப்பீடு வழங்கப்படவில்லை.
இந்நிலையில் இழப்பீடு வழங்கக்கோரி நல்லதங்காள் அணையில் இருந்து மண் எடுத்துவந்து அதற்கு பூஜை செய்து விவசாயிகள் தங்கள் போராட்டத்தை தொடங்கினர். விவசாயிகளின் போராட்டம் ஐந்தாவது நாளை எட்டியுள்ள நிலையில் இன்று மனிதருக்கும், நாய்க்கும் மாலை மாற்றி இருவருக்கும் திருமணம் நடைபெறுவது போல் நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட துவங்கியுள்ளனர்.
எனவே அரசு இவ்விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனில் அடுத்தக்கட்ட போராட்டத்தில் ஈடுபடுவோம் என விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
வேந்தன்







