திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் அருகே பெட்ரோல் பங்கில் ஊழியரை ஒருவர் அரிவாளால் வெட்டி விட்டு சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் முக்கூடலில் இருந்து ஆலங்குளம் செல்லும் சாலையில் பெட்ரோல் பங்க் அமைந்துள்ளது. இங்கு கடந்த ஜூலை மாதம் 17ம் தேதி வீரவநல்லூரை சேர்ந்த விஜய்(23), கருத்தப்பாண்டி(30), ரங்கசாமி ஆகியோர் பெட்ரோல் நிரப்ப வந்தனர். ஆனால் பெட்ரோல் நிரப்பிவிட்டு பணம் தராமல் அங்கிருந்த ஊழியர்களுடன் தகராறு செய்து மறுநாள் வந்து பங்க் உரிமையாளர் ராஜன், சுபாஷ் ஆகியோரை அரிவாளால் வெட்டி விட்டு தப்பியோடினர்.
இது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள மூவரும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில் கைது செய்யப்பட்டுள்ள மூவரின் நண்பரான அரிகேசவநல்லூரை சேர்ந்த குமார் தனது சக நண்பர்களுடன் வந்து பெட்ரோல் பங்கில் பணியில் இருந்த ஓடைமறிச்சான் பகுதியை சேர்ந்த வேணிராஜ்(28) என்பவரை அரிவாளால் சராமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடி உள்ளனர்.
இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. படுகாயமடைந்த வேணிராஜ் முக்கூடல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். வேணிராஜ் தான் கடந்த ஜூலை மாதம் தாக்குதலில் ஈடுபட்டவர்களை விரட்டி சென்று பிடித்ததாக கூறப்படுகிறது.
இதனை மனதில் கொண்டே அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து பாப்பாக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேந்தன்







