திருநெல்வேலி மாவட்டங்களில் உற்பத்தியாகும் காய்கறிகள் காவல்கிணறு காய்கறி சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் வரத்து அதிகரிப்பால் காய்கறிகளின் விலையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் மற்றும் நாங்குநேரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகளவில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.இப்பகுதியில் உற்பத்தியாகும் காய்கறிகள் அருகிலுள்ள காவல்கிணறு காய்கறி சந்தையில் விற்பனைக்கு கொண்டு செல்லப்படுவது வழக்கம்.கடந்த மாதம் காய்கறிகளின் விலை உச்சத்தை தொட்டது.
குறிப்பாக கடந்த 10 நாட்களுக்கு முன்பாக வரையில் கேரளாவில் ஓணம் பண்டிகை இருந்ததால் காய்கறிகளின் விலையில் நல்ல ஏற்றம் காணப்பட்டது.குறிப்பாக தக்காளி, வெங்காயம் உள்ளிட்டவைகளின் விலை விண்ணை முட்டும் அளவிற்கு இருந்தது.
இந்நிலையில் தற்போது வரத்து அதிகரிப்பு மற்றும் தேவை குறைவின் காரணமாக காய்கறிகளின் விலை கடுமையான சரிவை சந்தித்துள்ளது.குறிப்பாக 20முதல் 30வரையில் விற்பனையான வெண்டைக்காய்,புடலங்காய்,வெள்ளரிக்காய் உள்ளிட்டவைகளின் விலை தற்போது கிலோ ஒன்றுக்கு 1அல்லது 2 என்ற நிலையிலே உள்ளது.இதனால் காய்கறிகளை பயிரிட்டுள்ள விவசாயிகள் கடுமையான நஷ்டத்தை சந்தித்துள்ளனர்.
உற்பத்திக்கு செலவு கூட கிடைக்காததால் விரக்தியடைந்துள்ள விவசாயிகள் விளைநிலங்களில் கால்நடைகளை விட்டு பயிரிட்டுள்ள காய்கறிகளை மேய்ச்சுகின்றனர். மேலும் பல காய்கறிகளை கால்நடைகளின் தீவனமாக மட்டுமே தற்போது விவசாயிகள் வேறு வழியின்றி பயன்படுத்துகின்றனர்.இது பலதரப்பட்ட விவசாயிகளை கடுமையாக பாதிப்படைய செய்துள்ளது.
வேந்தன்







