கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தும் தனியார் பள்ளி-நடவடிக்கை எடுக்கக்கோரி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

தனியார் பள்ளி அரசு பொதுத்தேர்வு மாணக்கர்களுக்கு சிறப்பு வகுப்புகளை நடத்தி வருவது சமூக ஆர்வலர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரை அடுத்த ஆறுமுகநேரியில் செயல்பட்டு வருகிறது பெர்ல்ஸ் பப்ளிக் பள்ளி.இப்பள்ளியில்…

தனியார் பள்ளி அரசு பொதுத்தேர்வு மாணக்கர்களுக்கு சிறப்பு வகுப்புகளை நடத்தி வருவது சமூக ஆர்வலர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரை அடுத்த ஆறுமுகநேரியில் செயல்பட்டு வருகிறது பெர்ல்ஸ் பப்ளிக் பள்ளி.இப்பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை சிபிஎஸ்சி பாடத்திட்டத்தின் கீழ் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் நிலவும் கடுமையான வெயிலின் தாக்கத்தின் காரணமாக பள்ளிகளுக்கான கோடை விடுமுறையை பள்ளிக்கல்வித்துறை ஜூன் 14 வரை நீட்டித்துள்ளது.மேலும் கோடை விடுமுறையின்போது மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் எடுப்பதாக கூறி அவர்களை அழைக்கக்கூடாது எனவும் அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில் அரசின் உத்தரவுகளை மீறி 10,1,12 ஆகிய வகுப்பு மாணவர்களுக்கு
சிறப்பு வகுப்புகள் வைப்பதாக கூறி பள்ளி நிர்வாகத்தின் சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.இதனையடுத்து இன்று பள்ளி வாகனத்தில் சுமார் 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் பள்ளி சீருடையில் அழைக்கப்பட்டுள்ளனர்.

இது சமூக ஆர்வலர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.ஏற்கனவே வெயிலின் தாக்கம் கடுமையாக இருப்பதால்தான் அரசு கோடை விடுமுறையை நீட்டித்துள்ளது,ஆனால் அதனை மதிக்காமல் தனியார் பள்ளிகள் சிறப்பு வகுப்புகள் எடுப்பது மாணவர்களை மனதளவிலும்,உடலளவிலும் பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளனர்.எனவே பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

-வேந்தன்

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.