தமிழ்நாட்டிலிருந்து இலங்கைக்கு பயணிகளுடன் கார்டில்யா சொகுசு கப்பல் பயணமாகியுள்ள நிலையில், மேலும் ஒரு கப்பல் நிறுவனம் சேவை தொடங்க விருப்பம் தெரிவித்துள்ளதாக சென்னை துறைமுக ஆணையத் தலைவர் சுனில் பாலிவால் தெரிவித்துள்ளார்.
கார்டில்யா சொகுசு கப்பலில் இலங்கைக்கு செல்லும் திட்டம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சென்னை துறைமுக ஆணையத் தலைவர் சுனில் பாலிவால் ஆண்டிற்கு 4 முதல் 6 சொகுசு கப்பல்கள் தான் சென்னை துறைமுகத்திற்கு வரும். அதில் 1,000 முதல் 1,5000 பேர்தான் வருவார்கள்.
கொரோனா காலத்தில் எந்த கப்பலும் வராத நிலை இருந்தது. இந்நிலையில் 2022 ஜூனில் கார்டில்யா கப்பல் வந்தது. தொடர்ந்து 37 சொகுசு கப்பல்கள் மூலமாக 85,000 பயணிகள் வந்தார்கள். அதற்கு முன்பாக நாட்டிற்குள்ளேயே சுற்றுலா சென்ற சொகுசு கப்பல்கள் வந்த நிலையில், கார்டில்யா கப்பல் இலங்கைக்கு சென்றுள்ளது.
இந்த கார்டில்யா சொகுசு கப்பலில் செல்ல தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரா மட்டுமல்லாமல் வட மாநிலங்களிலிருந்தும் பயணிகள் வருவார்கள் என நம்புவதாக சுனில் பாலிவால் தெரிவித்துள்ளார். இந்நிலையில் எம்.எஸ்.சி சொகுசு கப்பல் நிறுவனம் சென்னையிலிருந்து இயக்குவதற்கு விருப்பம் தெரிவித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதோடு சென்னை துறைமுகத்தில் உள்ள முனையம் விமான நிலையத்தை போன்ற வசதிகள் கொண்டது எனவும் ஒரே நேரத்தில் இரண்டு கப்பல் வந்தால் கூட பயணிகளை கையாள முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.







