கணவன் உயிரிழந்த பிறகு சொகுசு வாழ்க்கைக்கு ஆசைபட்டு டிக் டாக் பெண் திருட்டிற்க்கு தலைமையேற்று நடத்தி கைதான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே ரிஷிவந்தியத்தில் வசிப்பவர் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் பர்னபாஸ். இவரது மகன் சென்னையில் புதிதாக வீடு ஒன்றைக் கட்டி வருகிறார். இதன் காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் பர்னபாஸ் ரிஷிவந்தியத்தில் உள்ள தமது வீட்டை பூட்டிவிட்டு, சென்னையில் தனது மகன் கட்டி வரும் புதிய வீட்டினை பார்ப்பதற்கு சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பர்னபாஸின் தம்பி, அண்ணனின் வீட்டை பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
உடனடியாக ரிஷிவந்தியம் போலீசாருக்கு அவர் தகவல் கொடுத்ததை அடுத்து, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு அறையில் வைக்கப்பட்டிருந்த பீரோவில் இருந்த பொருட்கள் கலைந்து சிதறிய படி இருந்ததை கண்டனர். மேலும் உடனடியாக சென்னையில் இருந்த பரனபாஸ்க்கு தகவல் கொடுக்கப்பட்டது.
பின்னர் அங்கு வந்த அவர் வீட்டில் வைத்திருந்த 17 சவரன் தங்க நகைகள் காணாமல் போய் இருப்பதாக தெரிவித்திருந்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, அந்த வீடியோ காட்சியில் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த இரண்டு மர்ம நபர்கள் பர்னபாஸின் வீட்டின் முன்பு வாகனத்தை நிறுத்திவிட்டு பையில் இருந்த இரும்பு கம்பியை எடுத்துச் சென்று சிசிடிவி கேமராக்களை உடைத்துள்ளனர்.
இந்த காட்சிகள் அனைத்து கேமராவில் பதிவாகி இருந்தது. இதனை அடுத்து சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்த ஹெல்மெட் அணிந்து வந்த கொள்ளையர்கள் யார் என்பது குறித்து ரிஷிவந்தியம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுதவிர ரிஷிவந்தியம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேலும் இரண்டு இடங்களில் நேற்று ஒரே இரவில் கொள்ளை சம்பவம் நடைபெற்று உள்ளது .
இதேபோல் திருக்கோவிலூர் உட்கோட்டத்திற்குட்பட்ட காவல் நிலையங்களில் கடந்த இரண்டு மாதங்களாக 30-க்கும் மேற்பட்ட இடங்களில் சுமார் 500 பவுனுக்கு மேலான தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு கொள்ளையர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். மேலும் பல்வேறு இடங்களில் சிசிடிவி காட்சிகளில் கொள்ளையர்கள் சிக்கி இருந்த நிலையில் அவர்களைத் தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். அப்போது பகண்டை கூட்டு சாலை பகுதியில் இருந்து திருட்டு சம்பவத்தை அரங்கேற்றியவர்களின் செல்போன் எண் விசாரணை வளையத்திற்குள் சிக்கியது . இதனையடுத்து விசாரணையை துரிதப்படுத்திய போலீசார் தொடர்ந்து அழைக்கப்பட்ட எண்களை சேகரித்தனர். அதில் சென்னையைச் சேர்ந்த சிலரின் எண்கள் தொடர் கொள்ளை சம்பவத்தில் இருந்து வந்தது தெரிய வந்தது.
மேலும் அந்த செல்போன் எண்கள் பதிவாகி இருக்கும் இடங்களை கண்காணித்த போலீசார் சங்கராபுரம் அருகே புதூர் சாலையில் வருவதை கண்டறிந்தனர். இதனால் அங்கு போலீசார் நடத்திய அதிரடி வாகன சோதனையில் காரில் வந்த மூன்று நபர்களை மடக்கிப் பிடித்து விசாரணையில் ஈடுபட்டனர். விசாரணையில் தாங்கள் பகண்டை கூட்டுச் சாலையில் வசித்து வருவதாகவும், சென்னையே சேர்ந்தவர்கள் என்றும் முன்னுக்கு பின்னாக பதில் அளித்ததன் பேரில் அவர்களை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் சென்னையைச் சேர்ந்த சிந்து, யுவராஜ், பாலாஜி ஆகியோர் என்றும் சிந்துவின் கணவர் உயிரிழந்த நிலையில் டிக் டாக் அழகியாக வலம் வந்த சிந்துவும் சென்னையை சேர்ந்த கார்த்திக் ,பாலாஜி ஆகியோருடன் பகண்டை கூட்டு சாலை பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருவதும் தெரியவந்தது.
மேலும் பகலில் நோட்டமிட்டு இரவில் கொள்ளை சம்பவத்தில் இவர்கள் ஈடுபட்டு வருவதும், தொடர்ந்து இரவு நேரத்தில் ஹெல்மெட் அணிந்து கொண்டு கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றி சொகுசு வாழ்க்கை இவர்கள் வாழ்ந்து வருவதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 41 பவுன் நகை, கொள்ளையடிக்க பயன்படுத்தப்பட்ட கார், மோட்டார் சைக்கிள், ஸ்கூட்டர் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட கார்த்திக், பாலாஜி, சிந்து ஆகிய 3 பேர் மீது சங்கராபுரம், மூங்கில்துறைப்பட்டு உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் 10-க்கும் மேற்பட்ட கொள்ளை சம்பவ வழக்குகள் நிலுவையில் உள்ளது .கணவன் உயிரிழந்த பிறகு சொகுசு வாழ்க்கைக்கு ஆசைபட்டு டிக் டாக் பெண் திருட்டிற்க்கு தலைமையேற்று நடத்தி கைதான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- பி.ஜேம்ஸ் லிசா