திருச்சி மத்திய சிறையில் முகாமில் உள்ள சிலர் வெளிநாட்டு போதை கும்பலுடன் தொடர்பில் இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, மாநகர போலீசார் அங்கு சோதனையில் ஈடுபட்டனர்.
திருச்சி மத்திய சிறையில் 1,500-க்கும் மேற்பட்ட தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் போலி பாஸ்போர்ட், குற்ற வழக்குகளில் தொடர்புடைய வெளிநாட்டினர், இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர்கள் ஜெயில் வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தண்டனை முடிந்தும் தங்களை வெளியே விடவில்லை என கூறி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த பிரச்சினை விஸ்வரூபம் எடுத்த நிலையில் சமீபத்தில் 14 இலங்கை தமிழர்களை முகாம் சிறையில் இருந்து மாவட்ட நிர்வாகம் விடுவித்தது. ஆனால் அவர்கள் இந்தியாவிலேயே தங்கி இருந்து வழக்கு விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டது. இதற்கிடையே தமிழகத்திலிருந்து போலி பாஸ்போர்ட் மூலம் இலங்கை தமிழர்கள் வெளிநாடுகளுக்கு தப்பி சென்று விட்டதாக புகார் எழுந்துள்ளது.
அதன் காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு என்ஐஏ அதிகாரிகள் மத்திய சிறையில் அதிரடியாக சோதனை நடத்தினர். அந்த சோதனையின்போது, சில முக்கிய ஆவணங்கள் கிடைத்ததாக அதிகாரிகள் தரப்பில் தகவல் தெரிவிக்கபட்டது.
இந்நிலையில், மீண்டும் திருச்சி மத்திய சிறையில் மாநகர போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இலங்கை தமிழர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ள முகாம் உட்பட பல்வேறு இடங்களில் காவல்துறையினர் சென்று சோதனை நடத்தினர். போதை பொருட்கள் மற்றும் ஆயுதங்கள் ஏதேனும் பதுக்கி வைத்துள்ளனரா? என போலீசார் ஆய்வு நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் சிறப்பு முகாமில் உள்ள சிலர் வெளிநாட்டு போதைக் கும்பலுடன் தொடர்பில் இருந்ததாக தெரியவந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த சோதனையில் 150 போலீசார் ஈடுபட்டுள்ளனர். அண்மையில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி சென்ற நிலையில், தற்போது, திருச்சி மாநகர போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டது மத்திய சிறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
– இரா.நம்பிராஜன்








