தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில்தொடர்ந்து பெய்து வரும் மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மழை பெய்ய…

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில்தொடர்ந்து பெய்து வரும் மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

சென்னையில் பரவலாக நேற்றிரவு முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதனால் அலுவலகங்கள் மற்றும் கூலி வேலைக்குச் செல்வோர் கடுமையாக பாதிக்கப்பட்டனர். சென்னை நங்கநல்லூரில் சூறாவளி காற்றால் பழமையான மரம் சாலையில் விழுந்ததில் வாகனத்தில் சென்று கொண்டிருந்தவர் லேசான காயமடைந்தார். இதனால் மரம் விழுந்த சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு மாநகராட்சி பணியாளர்கள் மரத்தை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

சென்னை செம்மஞ்சேரி ஓஎம்ஆர் சாலையில் மழைநீர் தேங்கி நிற்பதால் வாகன
ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகினர். சோழிங்கநல்லூர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே உள்ள சர்வீஸ் சாலையிலும் மழைநீர் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் சிரமம் அடைந்துள்ளனர்

கனமழை காரணமாக சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரங்களில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரிக்கு வினாடிக்கு 1146 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. ஏரியின் மொத்த கொள்ளவான 3 ஆயிரத்து 645 மில்லியன் கன அடியில் 2 ஆயிரத்து 403 மில்லியன் கனஅடியும், ஏரியின் நீர்மட்ட அளவான 24 அடியில் 19.17 அடியும் தண்ணீர் உள்ளது.

காஞ்சிபுரத்தில் பழைய ரெயில் நிலைய நுழைவுப் வாயில் உள்ளிட்ட ஒரு சில இடங்களில் மழை நீர் தேங்கி நிற்பதால்வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்துள்ளனர்.மேட்டுத் தெரு சந்திப்பு, ஹாஸ்பிடல் ரோடு பகுதிகளில் தண்ணீர் தேங்கியபோதும் அங்கு புதிதாக அமைக்கப்பட்ட வடிகால்களில் மழைநீர் வேகமாக வடிந்து செல்கிறது.

திருவள்ளூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக ஜமீன்கொரட்டூரில் 8.4 செமீ மழை பதிவாகியுள்ளது. பூந்தமல்லியில் 7.4 செமீ மழையும் ஆவடியில் 2.8 செமீ மழையும் செங்குன்றத்தில் 2.5 செமீ மழையும் தாமரைப்பாக்கம், சோழவரம், திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் தலா 1.6 செமீ மழையும் பதிவாகியுள்ளது.

இந்த நிலையில், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், விருதுநகர் மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி காரைக்காலில் அடுத்து மூன்று மணி நேரங்களுக்கு இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.