மதுரை பேரையூரில் பள்ளியின் பெயரை மாற்ற கோரி, மாணவ மாணவிகளை பள்ளிக்கு அனுப்பாமல் கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்.
மதுரை மாவட்டம் பேரையூர் அருகே மெய்னூத்தம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள அரசு ஆதிதிராவிட நல துவக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளியின் பெயர்கள் மெய்னூத்தம்பட்டி அரசு பள்ளி என்று இல்லாமல், அந்த கிராமத்திற்கு அருகே உள்ள சங்கரலிங்காபுரம் கிராம அரசு பள்ளி என அரசு பதிவேடுகளில் உள்ளது.
இதுகுறித்து தங்கள் கிராமத்தில் உள்ள பள்ளியின் பெயரை தங்கள் கிராமத்தின் பெயரிலேயே மாற்ற கோரி கடந்த 20 ஆண்டுகளாக கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வருவதாக கூறுகின்றனர். இந்நிலையில் இன்று பள்ளியின் பெயரை மாற்ற கோரி சங்கரலிங்காபுரம் பள்ளியில் பயிலும் 180க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளை பள்ளிக்கு அனுப்பாமல் பள்ளியை கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து பள்ளியின் பெயரை மாற்றவில்லை எனில் அனைத்து மாணவ மாணவிகளின் மாற்றுச் சான்றிதழை வழங்குமாறு கோரிக்கை விடுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கிராம மக்களின் இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.







