பொள்ளாச்சி அருகே மக்னா யானையை விரட்ட வந்த 3 கும்கி யானைகளை, ஒரு மாதத்திற்கு பிறகு டாப்சிலிப் யானைகள் முகாமிற்கு திருப்பி அனுப்பியதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
தருமபுரியில் பிடிக்கப்பட்ட மக்னா யானையை ஆனைமலை புலிகள் காப்பகம் டாப்சிலிப் பகுதியில் விடப்பட்டதையடுத்து, சில நாட்களிலேயே கோவை மதுக்கரை சென்றது. அதையடுத்து மீண்டும் மானம்பள்ளி வனச்சரகம் மந்திரி மட்டத்தில் வனத்துறையினர் விட்டனர். ஆனால் மக்னா யானை மீண்டும் பொள்ளாச்சி வனசரகத்திற்கு வந்து கடந்த ஒரு சில மாதமாக சரளபதி பகுதியில் உலா வரும் நிலையில், வனத்தை விட்டு வெளியே வராமல் இருக்க மூன்று கும்கி யானைகள் உதவிகளுடன் வனத்துறையினர் கடந்த ஒரு மாத காலமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் இரவு நேரத்தில் விவசாயத் தோட்டங்களில் உள்ள வேலிகளை உடைத்து விளைநிலங்களுக்குள் சென்று மா, தென்னை மரங்களை சேதப்படுத்துவதுடன் சரளப்பதில் கண்காணிப்புக்காக நிறுத்தப்பட்ட மூன்று கும்கி யானைகளுடன் விளையாடிவிட்டு அதற்கு வைக்கப்பட்ட உணவையும் உட்கொண்டு செல்கிறது.
இதைப்பார்த்த வனத்துறையினர் மக்னாவை விரட்ட அழைத்து வந்த மூன்று கும்கி யானைகளையும் டாப்சிலிப் வன பகுதிக்கு திருப்பி அனுப்பினர். இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
மேலும் தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்கம் சார்பில், கடந்த ஒரு மாத காலமாக சரளபதி பகுதியில் தென்னை, மா மற்றும் பயிர்களை சேதப்படுத்தும் மக்னா யானையை பிடித்து வேறு இடத்தில் விட வேண்டும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் ஆகியவற்றை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக அறிவிப்பையும் வெளியிட்டுள்ளனர்.
—–ரூபி.காமராஜ்







