அச்சுறுத்தும் கொரோனா: புதுச்சேரியிலும் புதியக் கட்டுப்பாடுகள்

கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த தமிழ்நாட்டைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் புதியக் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த டிச.21ம் தேதி 5,321ஆக இருந்த தொற்று பாதிப்பு…

கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த தமிழ்நாட்டைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் புதியக் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த டிச.21ம் தேதி 5,321ஆக இருந்த தொற்று பாதிப்பு இன்று 90,928ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் பல்வேறு மாநிலங்கள் தொற்று தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன.

தமிழ்நாட்டில் இன்று முதல் இரவு ஊரடங்கு உள்ளிட புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுவதாக அரசு அறிவித்திருந்தது. இதனையடுத்து புதுச்சேரியிலும் புதியக் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக மால்கள், வனிக நிறுவனங்கள், 50% வாடிக்கையாளர்களுடன் மட்டுமே இயங்கவும், வெளி மாநிலத்தில் இருந்து வரும் வாகனங்களில் 50 % பயணிகளுடன் மட்டுமே வர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், திரையரங்குகளில் 50% இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி என்றும், உணவகங்கள், பார்கள், மதுபானக்கூடங்களில் 50% பேர் மட்டுமே அனுமதி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல கலையரங்கம், அரங்கம் போன்றவற்றிலும் 50% எண்ணிக்கையுடனும் கோயில்களில் பக்தர்கள் இன்றி கும்பாபிஷேகம் நடத்திக்கொள்ளவும் அனுமதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளை பொறுத்த அளவில் கொரோனா வழிகாட்டுதல்களை பின்பற்றி செயல்படலாம் என்று புதுச்சேரி அரசு தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து பேட்டியளித்த புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் வல்லவன்,

“கடந்த சில தினங்களாக புதுச்சேரியில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுடன் கூடுதல் கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளன, முழு ஊரடங்கை தவிர்ப்பது தான் புதுச்சேரி அரசின் எண்ணம்.” என்று தெரிவித்துள்ளார். மேலும்,

“பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் கொரோனா பரவல் வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றி இயங்கலாம்.

அனைவரும் தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டும், கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். பொதுமக்கள் முகக்கவசம் அணிவதை கண்காணிக்க குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது, முகக்கவசம் அணியாதவர்கள் மீது அபராதம் விதிக்கப்படும்.” என்றும் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.