நேற்று பிரதமர் நரேந்திர மோடியின் பஞ்சாப் பயணத்தில் பாதுகாப்பு குறைபாடுகள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இன்று, பிரதமர் நீண்ட நாள் நலமாக வாழ வேண்டும் என்று மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிறப்பு வழிபாடு நடத்தினார்.
பஞ்சாப், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் இந்த ஆண்டு சட்டப் பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்கள் பிரச்சாரத்தினை தீவிரப்படுத்தியுள்ளன.
இதன் தொடர்ச்சியாக பஞ்சாப் மாநிலத்தில் பாஜக நேற்று சிறப்பு பேரணியை ஏற்பாடு செய்திருந்தது. இந்த பேரணியை தொடக்கி வைத்து பல்வேறு நலத் திட்ட உதவிகளை வழங்குவதற்காக பிரதமர் நரேந்திர மோடி பஞ்சாப் மாநிலத்திற்கு பயணம் மேற்கொண்டிருந்தார்.

இதனையடுத்து மோசமான வானிலை மற்றும் விவசாயிகளின் போராட்டம் காரணமாக பிரதமரின் பயண பாதியில் கைவிடப்பட்டது. இது குறித்து “பாதுகாப்பு மீறல் காரணமாக பிரதமரின் பயணம் ரத்து செய்யப்பட்டது” என உள்துறை அமைச்சகம் குற்றம்சாட்டியது. அதேபோல இது குறித்து உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் மத்திய உள்துறை அமைச்சகம் கோரியுள்ளது.

இந்நிலையில், பிரதமர் நீண்ட காலம் நலத்துடன் வாழ போபாலில் உள்ள குஃபா கோயிலில் சிறப்பு வழிபாட்டினை மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் நடத்தியுள்ளார். அதே போல டெல்லியில் உள்ள ஜாண்டேவாலன் கோயிலில் பாஜக தேசிய துணைத் தலைவர் ஜெய் பாண்டாவும் சிறப்பு வழிபாட்டினை நடத்தியுள்ளார்.








