தங்களுடைய சுயநலத்திற்காக அன்று ஆட்சியை அடகு வைத்தவர்கள், இன்று கட்சியை அடகு வைத்திருக்கிறார்கள் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
சென்னை போரூரில், மதுரவாயல் தெற்கு பகுதி திமுக சார்பில் பேராசிரியர் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரும், திமுக இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “என் அரசியல் வாழ்க்கைக்கு முதல் உரை எழுதியது மதுரவாயல் பகுதி தான். தங்களுடைய சுயநலத்திற்காக அன்று ஆட்சியை அடகு வைத்தவர்கள், இன்று கட்சியை அடகு வைத்திருக்கிறார்கள்.
ஆளுநருக்கு நன்றி சொல்ல வேண்டும். ஏனெனில் மக்களுக்காக செயல்படுபவர் யார் என்று மக்களுக்கு வெளிக்காட்டுகிறார். ஆளுநர் விவகாரத்தில் கொதித்தெழுந்தது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான். சட்டமன்றத்தில் ஆளுநர் கோபித்து கொண்டு சென்றதை தான் நீங்கள் பார்த்தீர்கள். ஆனால் அதற்கு முன்னரே இரண்டு பேர் வெளிநடப்பு செய்து விட்டனர். ஆளுநர் கோபித்துக் கொள்வார் என இரண்டு பேரும் முன்னரே வெளியேறிவிட்டனர்.
நட்புக்கு உதாரணம் கலைஞர், பேராசிரியர் தான். பேராசிரியர் மீது பற்றும் பாசமும் கொண்டவர் தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். 2019ஆம் ஆண்டு இளைஞரணி செயளாலராக தேர்ந்தெடுக்கப்பட்ட போது, முதன்முதலில் நான் ஆசி வாங்கியது பேராசிரியரிடம் தான். 2021 தேர்தலின் போது சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது நான் பேராசிரியரின் பேரனுக்காக, வில்லிவாக்கத்திற்கு சென்று நான் வாக்கு சேகரித்தேன்.
தமிழ்நாடு முழுவதும் பாசறை கூட்டம் நடத்தி முடித்துள்ளோம். மு.க.ஸ்டாலினிடம் பாசறை கூட்டத்திற்காக பாராட்டை பெற்றுள்ளோம். மோடியின் ஒன்பது வருட ஆட்சி காலத்தில், எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்குவது, பாசிசத்தை ஊக்குவிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டிருக்கிறது. இந்த கூட்டம் இறுதி கூட்டம் இல்லை. நாடாளுமன்ற தேர்தலுக்கான முதல் கூட்டம். அதற்கு முன்னோட்டமாக ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் பணியாற்ற வேண்டும். 2024ல் நாற்பது தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும்” என்று பேசினார்.