தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள முத்துநகர் கடற்கரையில் பொதுமக்களை கவரும் வகையில் கடல்சார் விளையாட்டுகளை திமுக வின் துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. கொடியசைத்து தொடக்கி வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள முத்துநகர் கடற்கரையில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் பல்வேறு பொழுது போக்கு அம்சங்கள் மற்றும் விளையாட்டுக்கள் தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இந்த போட்டிகளில் பொதுமக்கள் கலந்து கொள்ளும் வகையில் ஹோலி ஐலேன்ட் வாட்டர் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் மூலம் பம்பர் சவாரி, பனானா சவாரி, விண்ட் சர்ஃபிங், ஸ்டாண்ட் அப் போர்ட் ஆகிய நான்கு விளையாட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
கடல்சார் விளையாட்டுப் போட்டிகளுக்கான தொடக்க விழாவில் தூத்துக்குடி எம்பி கனிமொழி பங்கேற்று விளையாட்டுப் போட்டிகளை கொடியசைத்து தொடக்கி வைத்தார்.
இதன் பின்னர் படகில் மாநகராட்சி பள்ளி மாணவ-மாணவிகளுடன் கனிமொழி எம்பி, அமைச்சர் கீதாஜீவன், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், தூத்துகுடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் பயணம் செய்தனர். முத்துநகர் கடற்கரையில் ஏராளமான பொதுமக்கள் காலை மற்றும் மாலை நேரத்தில் உடற்பயிற்சி மற்றும் நடைபயிற்சியில் ஈடுபடுகிறார்கள்.
தற்போது இந்த கடற்கரையில் பல்வேறு புதிய அம்சங்கள் நிறைந்த விளையாட்டு உபகரணங்கள் மற்றும் புதிய விளையாட்டு போட்டிகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.







