இது வெறும் வதந்தி! “பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறு கதையில் நடிக்க யாரும் அணுகவில்லை” – நடிகர் சத்யராஜ்!

பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறு கதையில் நடிப்பதற்காக எந்த தயாரிப்பு நிறுவனமும் என்னை அணுகவில்லை,  இது வெறும் வதந்தி என நடிகர் சத்யராஜ் தெரிவித்தார்.  ‘ரோமியோ’  திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய் ஆண்டனி மற்றும்…

பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறு கதையில் நடிப்பதற்காக எந்த தயாரிப்பு
நிறுவனமும் என்னை அணுகவில்லை,  இது வெறும் வதந்தி என நடிகர் சத்யராஜ் தெரிவித்தார். 

‘ரோமியோ’  திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய் ஆண்டனி மற்றும் சரத்குமார் இணைந்து நடித்துள்ள புதிய திரைப்படம் “மழை பிடிக்காத மனிதன்”.  விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தில் சத்யராஜ்,  டாலி தனஞ்சயா,  முரளி ஷர்மா,  மேகா ஆகாஷ்,  தலைவாசல் விஜய்,  சரண்யா பொன்வண்ணன் மற்றும் பிருத்வி அம்பெர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.  கமல் போஹ்ரா,  லலிதா, பிரதீப் மற்றும் பன்கஜ் போஹ்லரா இணைந்து தயாரித்துள்ளனர்.

இந்த திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னை,  சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேப்பில் இன்று நடைபெற்றது.  இந்நிகழ்ச்சியில் நடிகர் விஜய் ஆண்டனி,  சத்யராஜ் மற்றும் நடிகை மேகா ஆகாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். ‘மழை பிடிக்காத மனிதன்’ திரைப்பட டீசர் வெளியீடு விழாவிற்கு பின்னர் நடிகர் விஜய் ஆண்டனி மற்றும் நடிகர் சத்யராஜ்  ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசினர்.

அப்போது நடிகர் சத்யராஜ் கூறியதாவது :

“பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாற்று கதையில் நடிப்பதற்காக யாரும் என்னை
அணுகவில்லை.  அது வெறும் வதந்தி தான்.  இந்த தகவலை நான் ஊடகத்தில் பார்த்து தான் தெரிந்து கொண்டேன்.  அப்படி பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாற்றில் நடிக்க வேண்டும் என்றால்,  உள்ளதை உள்ளபடி சொன்னால் வாழ்க்கை வரலாற்றில் நடிக்கலாம். அதே போல் நான் குறிப்பிட்ட இயக்குநர்கள்  (மாரி செல்வராஜ், பா.ரஞ்சித் மற்றும் வெற்றிமாறன்) இயக்கினால் நடிப்பதில் மகிழ்ச்சி” எனத் தெரிவித்தார்.

பா. ரஞ்சித் மற்றும் வெற்றிமாறன் ஆகியோரின் கதை தவறு என்று சிலர் கூறுகிறார்கள்
என்ற கேள்விக்கு பதில் அளித்த நடிகர் சத்யராஜ்,  “அது அவரவர் கருத்து சுதந்திரம் யார் வேண்டுமென்றாலும் கதை எழுதலாம்,  திரைப்படம் எடுக்கலாம். வெற்றிமாறன் பா ரஞ்சித் மற்றும் மாரி செல்வராஜ் போன்ற இயக்குநர்களை நான் வரவேற்கிறேன். இவர்களைப் போன்ற இயக்குநர்கள் சமுதாயத்திற்கு தேவை” என கூறினார்.

இதையும் படியுங்கள் : ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ தயாரிப்பாளர்கள் மீது மோசடி புகார்! வெளியான அதிர்ச்சித் தகவல்!

இதனைத் தொடர்ந்து நடிகர் மற்றும் இசையமைப்பாளரான விஜய் ஆண்டனி
செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது :

” ‘மழை பிடிக்காத மனிதன்’ திரைப்படம் மிக அருமையாக இருக்கும்.  இயக்குநரின் உழைப்பிற்கு ஏற்ற பலன் கிடைக்கும்.  தனது நடிப்பில் உருவாகிய “நான்” திரைப்படத்திற்கு பின்னர் வேறு திரைப்படங்களுக்கு இசையமைப்பது குறைந்துவிட்டது.  இந்த ஆண்டு இறுதியில் இருந்து மற்ற படங்களுக்கும் இசையமைக்க உள்ளேன்.  மேலும்,  ‘மழை பிடிக்காத மனிதன்’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள இசையமைப்பாளர் இளையராஜாவின் பாடலுக்கு முறையான அனுமதி கோரி தயாரிப்பாளர்கள் இளையராஜா  நாடியுள்ளனர்.  முறையாக இந்த பாடலுக்கு அனுமதி பெற உள்ளோம்.

மேலும்,  நான் இசையமைத்த பாடல்கள் யாரேனும் பயன்படுத்தலாமா இன்று அணுகினால்
தாராளமாக அனுமதி பெற்று பயன்படுத்தலாம்.  மேலும் பாடல்கள் நிறுவனத்திடம் அனுமதி பெற்று பயன்படுத்திக் கொள்ளலாம். ”

இவ்வாறு நடிகர் விஜய் ஆண்டனி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.