” இது ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தின் பினாமி வீடு “ – குடும்பத்தாரிடம் நாடகமாடிய பணிப்பெண் ஈஸ்வரி

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது பெயரில் பினாமியாக வீடு வாங்கினார் என நகை திருடிய வழக்கில் கைது  செய்யப்பட்ட பணிப்பெண் தனது குடும்பத்தினரை நம்பவைத்து நாடகமாடியது விசாரணையில் அம்பலமாகியுள்ளது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது பெயரில் பினாமியாக…

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது பெயரில் பினாமியாக வீடு வாங்கினார் என நகை திருடிய வழக்கில் கைது  செய்யப்பட்ட பணிப்பெண் தனது குடும்பத்தினரை நம்பவைத்து நாடகமாடியது விசாரணையில் அம்பலமாகியுள்ளது

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது பெயரில் பினாமியாக வீடு வாங்கியதாகவும் வெளி
உலகத்திற்குத்தான் இது  நமது வீடு அல்ல,  உண்மையில் அது ஐஸ்வர்யா ரஜினிகாந்த்க்கு
சொந்தமானது என திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட ஈஸ்வரி தனது குடும்பத்தாரிடம் நம்பவைத்து நாடகமாடியுள்ளார்.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் திருடிய வழக்கில் வீட்டில் வேலை செய்த
பணிப்பெண் ஈஸ்வரி மற்றும் கார் ஓட்டுநர் வெங்கடேசன் ஆகிய இருவர் தேனாம்பேட்டை
போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட ஈஸ்வரியிடமிருந்து 100
சவரன் தங்க நகைகள், 30 கிராம் வைர நகைகள், 4கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும்
வீட்டு சொத்து ஆவணங்கள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது.

இதனையும் படியுங்கள்: இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் பதிவிட விலை உயர்ந்த பைக் திருடிய இளைஞர்கள் கைது

இந்த நிலையில் கைது செய்யப்பட்ட வெங்கடேசனிடம் ரூபாய் 9 லட்சம் ஈஸ்வரி
கொடுத்துள்ளார் என்ற தகவல் போலீசருக்கு தெரியவந்துள்ளது. இதன் அடிப்படையில் வெங்கடேசனிடம் கொடுக்கப்பட்ட ரூபாய் 9 லட்சம் பணத்தை மீட்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், ஈஸ்வரி தனது கணவர் அங்கமுத்து பெயரில் வங்கி கணக்கில் அடகு வைத்துள்ள 350 கிராம் தங்க நகை மீட்கும் முயற்சியிலும் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக ஈஸ்வரியின் திருட்டு சம்பவத்துக்கு அவரது கணவர் அங்கமுத்து உதவி இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

ஆனால் ஈஸ்வரி திருடியது மற்றும் சோழிங்கநல்லூர் பகுதியில் வீடு வாங்கியது என
எதுவும் அங்கமுத்துக்கு தெரியாத வகையில் ஈஸ்வரி செயல்பட்டு வந்துள்ளார் என்பது
போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. குறிப்பாக சோழிங்கநல்லூர் பகுதியில்
வீடு வாங்கியது குறித்து ஈஸ்வரி தனது வீட்டில் ஒரு நாடகத்தை அரங்கேற்றியுள்ளார்.

அதில் சோழிங்கநல்லூரில் வாங்கிய வீடு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது பெயரில் பினாமியாக வாங்கியதாகவும் வெளி உலகத்திற்கு இது நமது வீடு எனவும்; உண்மையில் இந்த வீடு ஐஸ்வர்யா ரஜினிகாந்த்க்கு சொந்தமானது எனவும் கூறி இது குறித்து யாரிடமும் வெளியில் சொல்லக்கூடாது எனவும் கூறியுள்ளார். இதனால் வீட்டில் இருந்தவர்களுக்கு சந்தேகம் இல்லாத வண்ணம் ஈஸ்வரி செயல்பட்டது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.