ஆன்லைன் ரம்மி தடை சட்டமசோதாவின் போது ஓ.பன்னீர்செல்வத்தை பேச அனுமதித்த சபாநாயகரை கண்டித்து அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர். எடப்பாடி பழனிசாமி தரப்பு எம்.எல்.ஏக்களை எதிர்த்து மனோஜ் பாண்டியன் வேட்டியை மடித்து கட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சட்டப்பேரவையில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா தாக்கல் செய்யப்பட்ட போது அவையில் இருந்த சட்டமன்ற கட்சித் தலைவர்கள் தடைச் சட்டத்திற்கு ஆதரவாக பேசினர். அப்போது அதிமுக சார்பில் பேசிய தளவாய் சுந்தரம், ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு அதிமுக முழு ஆதரவளிப்பதாக தெரிவித்தார். அவரை தொடர்ந்து பேசிய ஓ.பன்னீர்செல்வம், முதலமைச்சர் கொண்டு வந்த ஆன்லைன் ரம்மி தடை சட்டத்தை அதிமுக சார்பாக முழுமையாக வரவேற்பதாக பேசினார்.
இதையும் படிக்கவும்: ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ; சட்டமன்றத்தில் ஒருமனதாக மீண்டும் நிறைவேற்றம்
அதிமுக சார்பாக என பேசிய ஓ.பன்னீர்செல்வத்திற்கு அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் கடும் கண்டனக் குரல் எழுப்பினர். அப்போது பேசிய எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக சார்பில் தளவாய்சுந்தரம் பேசிவிட்டார் எனவும், மற்றொருவருக்கு வாய்ப்பு தருவது குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாகவும் கூறினார். பெரும்பான்மை சட்டமன்ற உறுப்பினர்கள் யார் பக்கம் இருக்கிறார்களோ அவர்கள் தான் எதிர்க்கட்சி எனவும், கட்சிக்கு ஒருவர் பேச வேண்டும் என்பது தான் மரபு எனவும் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
இதற்கு, ஓ.பன்னீர்செல்வத்தை எதிர்க்கட்சி துணைத்தலைவர் என்றோ, அதிமுக உறுப்பினர் என்றோ அழைக்கவில்லை எனவும் மூத்த உறுப்பினர், முன்னாள் முதல்வர் என்ற அடிப்படையிலே அனுமதி வழங்கியதாக சபாநாயகர் விளக்கமளித்தார். சட்டமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தான் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை என கூறிய சபாநாயகர். அதிமுக விவகாரங்களுக்குள் தான் வரவில்லை எனவும் சபாநாயகர் பேசினார்.
இதற்கு இடையில் அதிமுக உறுப்பினர் கோவிந்தசாமிக்கும் மனோஜ் பாண்டியனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. சட்டப்பேரவையில் மனோஜ் பாண்டியன் வேட்டியை மடித்து கட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து சபாநாயகரின் விளக்கத்தை ஏற்க மறுத்த அதிமுக உறுப்பினர்கள், கூச்சலிட்டு வெளிநடப்பு செய்தனர்.







