#ThirupatiLaddu | “தேசிய அளவில் பிரச்னையை ஊதிப் பெரிதாக்குகிறீர்கள்” – பவன் கல்யாணுக்கு பிரகாஷ் ராஜ் பதிலடி!

திருப்பதி கோயில் லட்டு விவகாரத்தில் குற்றவாளிகளை கண்டுபிடித்து கடுமையான நடவடிக்கை எடுக்கும்படியும், தேசிய அளவில் பிரச்னையை ஊதிப் பெரிதாக்குகிறீர்கள் எனவும் ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாணை நடிகர் பிரகாஷ் ராஜ் சாடியுள்ளார். ஆந்திராவில்…

#ThirupatiLaddu |"You are exaggerating the problem at the national level" - Prakash Raj's response to Pawan Kalyan!

திருப்பதி கோயில் லட்டு விவகாரத்தில் குற்றவாளிகளை கண்டுபிடித்து கடுமையான நடவடிக்கை எடுக்கும்படியும், தேசிய அளவில் பிரச்னையை ஊதிப் பெரிதாக்குகிறீர்கள் எனவும் ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாணை நடிகர் பிரகாஷ் ராஜ் சாடியுள்ளார்.

ஆந்திராவில் கடந்த 5 ஆண்டுகளாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெற்றது. ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சி காலத்தில், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில், விலங்குகளின் கொழுப்பு கலந்திருந்ததாக தற்போதைய முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஒரு பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். இது தேசிய அளவில் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதற்கு தேவஸ்தானத்தின் முன்னாள் அறங்காவலர் குழுத்தலைவர் சுப்பா ரெட்டி மறுப்பு தெரிவித்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவரான ஓய்.எஸ்.ஷர்மிளா கோரிக்கை விடுத்தார். தொடர்ந்து, நேற்று (செப். 19) லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யை ஆய்வகத்துக்கு அனுப்பி, கிடைத்த அறிக்கையை தெலுங்கு தேசம் கட்சி வெளியிட்டது. அதில் லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் மீன் எண்ணெய், மாமிச கொழுப்பு ஆகியவை கலந்திருந்தது உறுதி செய்யப்பட்டது. அத்துடன் பாமாயில் எண்ணெய் கலந்து இருப்பதும் உறுதி செய்யப்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக தேவஸ்தானம் அறிக்கை தாக்கல் செய்ய ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார். இன்று (செப். 20) மாலைக்குள் முழுமையான அறிக்கை அளிக்க திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளார். திருப்பதி லட்டு விவகாரத்தில் தவறு செய்தவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன் வைக்கப்பட்டு வருகிறது. அவருடைய ஆட்சி காலத்தில் தான் இப்படி பயங்கரமான விஷயம் ஒன்று நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து ஆந்திராவின் துணை முதலமைச்சர் மற்றும் நடிகர் பவன் கல்யாண், “திருப்பதி கோயிலில் அளிக்கப்படும் லட்டுக்களில் நெய்க்கு பதிலாக விலங்குகளின் கொழுப்பு சேர்க்கப்பட்டிருப்பது மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இனி நாடு முழுவதும் உள்ள கோயில்களில் இதுபோன்ற செயல்கள் நடைபெறாமல் இருக்க அதற்காக தனியே கமிட்டி ஒன்று அமைக்க வேண்டும். அதாவது சனாதன தர்ம ரக்ஷனா வாரியம் என்ற ஒன்றை உடனடியாக துவங்க வேண்டும். சனாதன தர்மத்தை இழிவு படுத்தும் வகையில் நடக்கும் இந்த விஷயங்களை முடிவு கட்ட நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும்” என்று ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார். 

இந்நிலையில் பவன் கல்யாணின் இந்த பதிவுக்கு பதிலடி கொடுத்துள்ள பிரபல நடிகர் பிரகாஷ்ராஜ், “அன்புள்ள பவன்கல்யாண்… நீங்கள் துணை முதலமைச்சராக இருக்கும் மாநிலத்தில் இது நடந்துள்ளது. தயவு செய்து விசாரணை செய்யுங்கள். குற்றவாளிகளை கண்டுபிடித்து கடுமையான நடவடிக்கை எடுங்கள். நீங்கள் ஏன் தேசிய அளவில் பிரச்னையை ஊதிப் பெரிதாக்குகிறீர்கள். நாட்டில் போதுமான வகுப்புவாத பதட்டங்கள் உள்ளன. (மையத்தில் உள்ள உங்கள் நண்பர்களுக்கு நன்றி)” என்று கடுமையாக சாடி பேசியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.