திருப்பரங்குன்றம் தீர்ப்பு : தமிழ்நாடு அரசு மறு சீராய்வு மனு தாக்கல் – பெ.சண்முகம் வரவேற்பு!

திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் தவறான தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளதை வரவேற்பதாக பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றலாம் என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு அண்மையில் உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. மேலும், வருகின்ற தீபத்திருநாளில் ஒருநாள் மட்டும் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்ற அனுமதி அளித்தது.

இந்தத் தீர்ப்பு தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. திமுக, இடதுசாரிகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தன.

சிபிஐ(எம்) மற்றும் சிபிஐ ஆகிய இடதுசாரிக் கட்சிகள், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு மறு சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தின.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், “திருப்பரங்குன்றத்தில் வழக்கத்திற்கு மாறாக தர்கா அருகில் உள்ள நில அளவைத் தூணில் இந்த ஆண்டு தீபம் ஏற்றிக்கொள்ளலாம் என்பது எந்த வகையிலும் சட்டத்தின் அடிப்படையிலான தீர்ப்பு அல்ல. இந்தத் தீர்ப்பிற்கு எதிராக உடனடியாக மறு சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார்.

இதனிடையே, திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்தது.

இந்த நிலையில், தமிழ்நாடு அரசு மறு சீராய்வு மனு தாக்கல் செய்திருப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில் கூறியிருப்பதாவது:

“திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் தவறான தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளதை வரவேற்கிறோம்.

மத வெறியர்களின் நிர்ப்பந்தங்களுக்கு அடிபணியாமல், உண்மையான பக்தர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, வழக்கமான இடத்தில் தீபம் ஏற்ற உறுதியான நடவடிக்கையை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும். அதற்கு அனைத்து மதச்சார்பற்ற சக்திகளும் துணை நிற்க வேண்டும்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.