ஓம்
ஆந்திராவில் திருப்பதி அருகே உள்ள காடுகளில் வளரும் செம்மரங்களுக்கு உலக அளவில் நல்ல சந்தை மதிப்பு உள்ளது. அவற்றைத் திருட்டுத்தனமாக வெட்டி, கோடிகளில் லாபம் சம்பாதிக்கிறார் துபாயைச் சேர்ந்த நஸ்ரூதீன்ஷா. சென்னையில் அந்தக் கடத்தலுக்கு உதவுகிறார் மம்முட்டி. இதைத் தடுக்க நினைக்கும் ஆந்திர அரசு, ஒரு தனிப்படையை அமைக்கிறது. ஐபிஎஸ் அதிகாரி சாய் பல்லவி அந்த அணியின் தலைவராக இருக்கிறார். மம்முட்டி அணியில் புகைப்படக் கலைஞராக வேலை செய்கிறார் உளவாளி போலீஸான தனுஷ். அப்போது ஆயிரம் டன் செம்மரக் கட்டைகளைக் கடத்தப் பெரிய திட்டம் தீட்டப்படுகிறது. போலீஸ் அணி செம்மரக் கடத்தல்காரர்களைக் கைது செய்ததா? தனுஷ் யார் என்ற உண்மை மம்முட்டி அணிக்குத் தெரியவந்ததா? இந்தச் சண்டையில் யாருக்கு இழப்பு, எப்படிப்பட்ட இழப்பு? இதுதான் ‘ஓம்’ படத்தின் கதை. ‘அமரன்’ படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருக்கிறார்.

சாதாரண புகைப்படக் கலைஞராக அறிமுகமாகி, கோயில் திருவிழாவில் ஆட்டம் போடும் தனுஷ், மம்முட்டியின் நம்பிக்கையைப் பெற்றவுடன் உளவாளியாகவும் செயல்படுகிறார். அவரது திட்டத்தின்படி, வில்லன் அணியில் உள்ள முக்கிய நபர்களைப் போலீஸ் கைது செய்கிறது. ஒருகட்டத்தில், அவரது தந்தை இந்திரன்ஸ் ஆந்திர போலீஸாரால் என்கவுன்டர் செய்யப்பட, தனுஷின் கதாபாத்திரம் மாறுகிறது. நடிப்பைப் பொறுத்தவரையில் தனுஷ் கலக்கியிருக்கிறார். அவருக்கும் மனைவியாக வரும் ஸ்ரீலீலாவுக்குமான பாசக் காட்சிகள் சூப்பர். அப்பாவை இழந்து அவர் தவிப்பதும், நல்லவரான மம்முட்டியிடம் தான் யார் என்பதை மறைத்து நடிப்பதும் அருமை. சாய் பல்லவி, தனுஷ் சம்பந்தப்பட்ட காட்சிகளும் செம. அவரது ரசிகர்கள் விரும்பும் வகையில் கமர்ஷியல் அம்சங்கள் அதிகம் இல்லாதது ஏமாற்றமே. பாடல்கள், சண்டைக் காட்சிகள் இருந்தாலும் பெரிய நிறைவைத் தரவில்லை. கிளைமாக்ஸில் சாய் பல்லவிக்கு முக்கியத்துவம் கொடுத்து, தனுஷின் கதாபாத்திரத்தை இரண்டாம் இடத்துக்குக் கொண்டு சென்றுவிட்டார் இயக்குநர்.
சென்னை பர்மா நகரின் பெரிய மனிதராக வரும் மம்முட்டி, நடிக்காமல் ‘நடித்து’ இருக்கிறார். மென்மையாகப் பேசி, ஆர்ப்பாட்டம் இல்லாமல் அளவாக நடித்திருக்கிறார். அவருக்கும் தனுஷுக்குமான காட்சிகள் ஓகே. ஆனால், அவரை அளவுக்கு அதிகமாக நல்லவராகக் காண்பிப்பதும், தனுஷ் மீது அதிக நம்பிக்கை வைத்திருப்பவராகக் காண்பிப்பதும், கிளைமாக்ஸ் சண்டையில் அவரை டம்மி ஆக்கியிருப்பதும் ஏற்க முடியவில்லை. மகா நடிகரான மம்முட்டியை இன்னும் சிறப்பாகப் பயன்படுத்தியிருக்கலாம்.
செம்மரக் கடத்தல்காரர்களால் போலீஸ்காரரான தனது தந்தையை இழந்து, கணவரையும் இழந்து இந்த ஆபரேஷனில் ஈடுபடுகிறார் சாய் பல்லவி. அவரது கெட்டப், எமோஷன் காட்சிகள், கிளைமாக்ஸ் சண்டை ஆகியவை படத்தைப் பலமாக்கியிருக்கின்றன. தனுஷின் மனைவியாக வரும் ஸ்ரீலீலாவின் நடிப்பு ஓகே. ஆனால், அவருக்கு உருப்படியாக ஒரு பாடல் காட்சிகூட இல்லாதது ஏமாற்றமே. இவர்களைத் தவிர, தனுஷின் அப்பாவாக வரும் இந்திரன்ஸ் உருக வைக்கிறார். டானாக வரும் நஸ்ரூதீன்ஷாவின் நடிப்பில் செயற்கைத்தனம் அதிகம். சாய் அபயங்கரின் இசை ஓகே. பாடல்களில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம்.
செம்மரக் கடத்தலைத் தடுக்கும் கிரைம் கதையில், அதில் ஈடுபடும் அப்பாவி மலைவாழ் தமிழர்களின் நிலை மற்றும் அவர்களுக்கு ஏற்படும் துயரங்களைச் சொன்ன விதம் ஓகே. ஆனால், திரைக்கதையில் விறுவிறுப்பு குறைவு. குறிப்பாக, கிளைமாக்ஸ் ஜெயில் சண்டை உள்ளிட்ட பல காட்சிகள் போராடுகின்றன. மம்முட்டி, தனுஷ், சாய் பல்லவி, ஸ்ரீலீலா என நல்ல டீம் படத்தில் இருக்கிறது. இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பாகவும் கமர்ஷியலாகவும் இருந்திருந்தால் பெரிய ஹிட்டாகியிருக்கும்.
சத்தியவான் சாவித்திரி
எந்தக் கேஸிலும் தோற்காத தனது சீனியர் மிஷ்கினை, ஒரு வழக்கில் புத்திசாலித்தனமாகத் தோற்கடிக்கிறார் ஜூனியரான கீர்த்தி சுரேஷ். ஒரு கொலை வழக்கில் கீர்த்தி சுரேஷின் கணவர் சாருகேஷ் சிக்குகிறார். அந்த வழக்கில் யார் ஜெயிக்கிறார்கள்? அந்த வழக்கில் சம்பந்தப்பட்டு கொல்லப்பட்ட பெண் யார்? அவரைக் கொலை செய்தது யார்? என்பதுதான் கதை. பிரவீன் எஸ். விஜய் இயக்கியிருக்கிறார்.
கோர்ட் ரூம் டிராமாதான் படத்தின் முக்கியமான அம்சம். இடையில் கீர்த்தியின் திருமணம், கணவருடன் சண்டை, பின்னர் சமாதானம், கணவரின் இன்னொரு முகம் எனக் கதை பயணிக்கிறது. கோர்ட் சம்பந்தப்பட்ட காட்சிகளில் மிஷ்கின், கீர்த்தி சுரேஷின் நடிப்பும் வாதங்களும் பிரமாதம். இருவரும் போட்டி போட்டுக்கொண்டு நடித்திருக்கிறார்கள். படத்தின் பெரும்பகுதி வாதங்களாக இருந்தாலும் போரடிக்கவில்லை. அப்பாவிபோல் இருந்துகொண்டு, மிஷ்கினை கீர்த்தி சுரேஷ் தோற்கடிக்கும் இடமும், கணவருக்காகத் தவிக்கும் இடங்களும் அருமை. கிளைமாக்ஸில் இன்னொரு முகத்தைக் காண்பித்து கதையை விறுவிறுப்பாக்கியிருக்கிறார்.

கம்பீரமான, ஸ்டைலிஷான வக்கீலாக வருகிறார் மிஷ்கின். அந்தக் கதாபாத்திரம் அவருக்கு பக்காவாகப் பொருந்தியிருக்கிறது. கீர்த்தி சுரேஷின் கணவராக வரும் சாருகேஷ் ஓரளவு நடித்திருக்கிறார். நண்பராக வரும் பால சரவணன் அவ்வப்போது சிரிக்க வைக்கிறார். கீர்த்தி சுரேஷின் கணவரின் காதலியாக வரும் ஷில்பா ஹாட். புராணத்தில் வரும் சத்தியவான் சாவித்திரி கதையை இந்தக் கதையுடன் ஒப்பிட்டு, கடைசியில் ஒரு மெசேஜ் சொல்லியிருப்பது ரசிக்க வைக்கிறது. மிஷ்கினை கீர்த்தி ஜெயிக்கும் வழக்கு, அதன் பின்னணி, விசாரணை ஆகியவை விறுவிறுப்பாக உள்ளன. கணவர் சம்பந்தப்பட்ட வழக்குக் காட்சிகள் கொஞ்சம் இழுக்கின்றன. கிளைமாக்ஸ் ட்விஸ்ட் புதுமை. கோர்ட் ரூம் டிராமா பிடிப்பவர்களுக்கு இந்தப் படம் பிடிக்கும். மற்றவர்களுக்குக் கொஞ்சம் பொறுமை தேவை.
அப்பாகுட்டி
ஊட்டியில் சினிமா லொகேஷன் மேனேஜராக இருக்கும் விஜய் ஆண்டனியின் மகள் லிதன்யாவுக்குத் திடீரென உடல்நலக் குறைவு ஏற்படுகிறது. ஸ்டெம் செல் சிகிச்சை செய்தால் குழந்தையைக் காப்பாற்றலாம். அதற்கு அந்தக் குழந்தையின் சகோதரன் அல்லது சகோதரியின் ஸ்டெம் செல் தேவை என்கிறார்கள். அப்போது, லிதன்யா தனது குழந்தை என்ற அதிர்ச்சித் தகவலைச் சொல்கிறார் விஜய் ஆண்டனி. பள்ளி ஆசிரியர் ப்ரீத்தி அஸ்ராணியும், விஜய் ஆண்டனியும் அந்தக் குழந்தையின் நிஜ அம்மா, அப்பாவைத் தேடிச் செல்கிறார்கள். ஆனால், அங்கே பல பிரச்சினைகள். அவையெல்லாம் தீர்ந்தனவா? அந்தக் குழந்தையின் நோய்க்குத் தேவையான விஷயங்கள் கிடைத்தனவா? குழந்தை உயிர் பிழைத்ததா? இதுதான் மு. மாறன் இயக்கிய ‘அப்பாகுட்டி’ படத்தின் கதை.

அப்பா பாசத்தை மையமாக வைத்து பல படங்கள் வந்திருக்கின்றன. ஆனால், இந்த மாதிரியான கதை வந்ததில்லை. தனக்குப் பிறக்காத ஒரு குழந்தையிடம் பாசமாக இருக்கும் அப்பா, அந்தக் குழந்தையின் உயிருக்காக அவமானங்களைச் சந்திக்கும் அப்பா, அந்தக் குழந்தையின் நிஜப் பெற்றோரிடம் கெஞ்சும் அப்பா எனப் பல இடங்களில் விஜய் ஆண்டனியின் நடிப்பு மனதைப் பாதிக்கிறது. குழந்தைக் கடத்தல், ஜோடிகளின் ஈகோ, பாதிக்கப்படும் குழந்தைகள் எனப் பல விஷயங்களைப் படத்தில் சொல்லியிருக்கிறார். விஜய் ஆண்டனியின் நடிப்பு சில இடங்களில் கண் கலங்க வைக்கிறது.
குழந்தை நட்சத்திரம் லிதன்யா ஆரம்பத்தில் ரசிக்க வைக்கிறார். உடல்நிலை பாதிக்கப்பட்டபோது உருக வைக்கிறார். கிளைமாக்ஸில் கோர்ட்டில் ஒரு வார்த்தையால் கண் கலங்க வைக்கிறார். அவரின் ஆசிரியையாகவும், விஜய் ஆண்டனியைக் காதலிப்பவராகவும் வரும் ப்ரீத்தி அஸ்ராணியும் தேர்ந்த நடிப்பைத் தருகிறார். குழந்தையின் நிஜ அம்மாவாக வரும் ஹரிப்பிரியா இசை, அப்பாவாக வரும் அருவி மதன், அவர்களின் குடும்பத்தினர், அவர்களின் பிரச்சினைகள், சண்டைகள் ஆகியவை திரைக்கதையில் முக்கியமான இடங்களைப் பிடிக்கின்றன. ‘நீதான் கண்ணாடி’ பாடல் முணுமுணுக்க வைக்கிறது.
தமிழ் சினிமாவில் எவ்வளவோ நோய்கள் பற்றிப் பேசியிருக்கிறார்கள். இந்த நோயும் அதற்கான தீர்வும் புதுசு. புனேவில் நடந்த ஓர் உண்மைச் சம்பவத்தின் பின்னணியில் கற்பனை கலந்து இந்தப் படம் உருவாகியிருக்கிறது. சில இடங்களில் படம் போரடித்தாலும், சில குறைகள் இருந்தாலும், அப்பா பாசத்தில் தனித்து நிற்கிறது. அப்பாவை நேசிப்பவர்களுக்குப் படம் பிடிக்கும்.
ஆகாயத்தில் ஒரு தாரகை
பவன் இயக்கத்தில் துல்கர் சல்மான், சாத்விகா நடித்த தெலுங்குப் படம் தமிழிலும் டப்பாகி வந்துள்ளது. சாலை வசதிகூட சரியாக இல்லாத ஒரு குக்கிராமத்தில் படிக்கும் சாத்விகா, ‘நான் விண்வெளிக்குச் செல்வேன்’ எனக் கனவு காண்கிறார். விண்வெளி வீராங்கனையாகப் படிக்க நினைக்கிறார். ஆரம்பத்தில் அவரது கனவைப் பலரும் கிண்டல் செய்கிறார்கள். அவரது பொறுப்பற்ற அப்பா, 16 வயதில் படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டு டிரைவராக இருக்கும் துல்கருக்குத் திருமணம் செய்து கொடுக்கிறார். முதலிரவில் மனைவியின் படிப்பு, கனவு பற்றி தெரிந்துகொள்ளும் துல்கர், மனைவியை கல்லூரியில் படிக்க வைக்கிறார். விண்வெளி சம்பந்தப்பட்ட மேற்படிப்பிலும் சேர்த்துவிடுகிறார். அதற்காக குஜராத்தில் டிரைவர் வேலை பார்த்து, மனைவியைப் பிரிந்து இருக்கிறார். சாத்விகாவின் ஆரம்பகட்ட விண்வெளித் திட்டங்கள் தோல்வி அடைகின்றன. அவரைக் கல்லூரியில் இருந்து வெளியேற்றுகிறார்கள். அடுத்து என்ன நடக்கிறது? அவரது விண்வெளிக் கனவு நிறைவேறியதா என்பதுதான் கதை.
பெண்கள் சம்பந்தப்பட்ட தன்னம்பிக்கைக் கதையாகவும், கனவு கண்டால் அது நடக்கும் என்ற அப்துல் கலாமின் வார்த்தைகளுக்கு உயிர் கொடுக்கும் கதையாகவும், மனைவியின் உயர்வில் மகிழ்ச்சி அடையும் நல்ல கணவனின் கதையாகவும் இந்தப் படம் உருவாகியுள்ளது. சாதாரண டிரைவராக இருந்து மனைவிக்காகக் கஷ்டப்படும் கதாபாத்திரத்திலும், மனைவியின் கனவை அடைய உற்சாகம் கொடுக்கும் கதாபாத்திரத்திலும் துல்கர் மனதில் நிற்கிறார். தனது கதாபாத்திரம், ஹீரோயின், பில்டப், முக்கியத்துவம் பற்றிக் கவலைப்படாமல் கதைக்காக நடித்திருக்கிறார். அவரைப் பார்ப்பவர்கள், இந்த மாதிரி கணவன் வேண்டும் என நினைப்பது நிச்சயம்.

புதுமுகம் என்றாலும், முதலில் கிராமத்து மாணவியாகவும், பின்னர் மனைவியாகவும், அடுத்து கல்லூரி மற்றும் விண்வெளி மாணவியாகவும் நடிப்பில் மிரட்டியிருக்கிறார் சாத்விகா. அவருக்குப் பல விருதுகள் நிச்சயம். சின்ன அசைவு, பேச்சு, நடவடிக்கைகள் மூலம் அவரது கதாபாத்திரத்தைச் செதுக்கியிருக்கிறார் இயக்குநர். விண்வெளியில் அவர் பறக்கும்போது பார்வையாளர்களின் மனமும் பறப்பது நிச்சயம். இவர்களைத் தவிர, நாசர், ஹீரோவின் அக்காவாக வரும் ஸ்வாசிகா, கவுதம் மேனன் ஆகியோரின் கதாபாத்திரங்களும் அருமை. இடைவேளைக்குப் பிறகு விண்வெளி நிறுவன அதிகாரியாக வரும் ஸ்ருதிஹாசனும் தன் பங்கிற்கு நல்ல நடிப்பைத் தந்து, படத்தின் வேகத்தை அதிகப்படுத்தியிருக்கிறார். குடும்பம், கணவன் – மனைவி பாசம், விண்வெளித் திட்டங்கள், தோல்விகள், நம்பிக்கை, வெற்றி எனப் படம் முழுக்கப் பல்வேறு உணர்வுகள் மாறி மாறி வருவது நல்ல அனுபவத்தைத் தருகிறது.
ஒரு எளிய குடும்பத்தைச் சேர்ந்த பெண் எப்படி ஜெயிக்கிறார்? அவருக்கு ஏற்படும் தடைகள் என்ன? அவற்றை எப்படி கடக்கிறார்? என்ற நேர்மறையான திரைக்கதையும், சமூக அக்கறை கொண்ட தன்னம்பிக்கை தரும் திரைக்கதையும், ஒருவித மகிழ்ச்சியான கிளைமாக்ஸும் படத்தைத் தூக்கி நிறுத்துகின்றன. விண்வெளிப் பயணம், ராக்கெட் என மேம்பட்ட தொழில்நுட்பம் சார்ந்த கருவாக இருந்தாலும், அதை அனைவருக்கும் புரியும்படி உணர்ச்சிபூர்வமான கமர்ஷியல் படமாகத் தந்திருக்கிறார் இயக்குநர் பவன். குழந்தைகள், குடும்பத்துடன் பார்த்து ரசித்து நேர்மறை ஆற்றலை உணரலாம். இந்த வார வின்னர் ‘ஆகாயத்தில் ஒரு தாரகை’தான்.
வயலட் கனவு

ராஜேஷ்குமார் எழுதிய கதை ‘வயலட் கனவு’ படமாக மாறியிருக்கிறது. பி. நித்தியானந்தம் இயக்க, விவந்த் விபின், ரெய்னா, ஆர். அரவிந்த்ராஜ் நடித்துள்ளனர். உளவியல் கிரைம் சஸ்பென்ஸ் திரில்லராக இந்தப் படம் உருவாகியுள்ளது. நாயகனுக்கு அடிக்கடி ஒரே மாதிரியான கனவு வருகிறது. அந்தக் கனவில் நடக்கும் சம்பவங்கள் நிஜமாகிவிடுமோ என்று அச்சப்படும் நாயகன், அதனால் உளவியல் ரீதியாகப் பாதிக்கப்படுகிறான். அதே சமயம், அவனைச் சுற்றி நடக்கும் சில சம்பவங்களும் அவனுக்கு உளவியல் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. அவற்றின் பின்னணியில் இருப்பது யார் என்பதுதான் படத்தின் கதை.
மீனாட்சிசுந்தரம், சிறப்புச் செய்தியாளர்




