மதுரை மாநகர் அவுட்போஸ்ட் பகுதியில் உள்ள பெரியார் சிலை அருகே போலிஸ் பூத்திற்குள் சென்று இளைஞர் உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து உயிரை மாய்த்து கொண்டுள்ளார். இது தொடர்பாக தல்லாகுளம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் உயரிழந்தவர் மதுரை மாநகர் நரிமேடு மருதுபாண்டியர் தெரு பகுதியை சேர்ந்த பூர்ண சந்திரன் (40) என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன் படி இன்று மதியம் 3.30 மணியளவில் மதுரை மாநகராட்சி அலுவலகம் மற்றும் அவுட்போஸ்ட் பெரியார் சிலை அருகே அந்த இளைஞர் தான் ஓட்டிவந்த சரக்குவாகனத்தை நிறுத்திவைத்துவிட்டு அங்குள்ள போலிஸ் பூத்திற்குள் சென்று கதவை பூட்டிய பின்னர் தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளித்ததாக கூறப்படுகிறது.
போலிஸ் பூத்தில் இருந்து அலறல் சத்தத்துடன் தீ பற்றி எரிவதை பார்த்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தல்லாகுளம் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தல்லாகுளம் தீயணைப்புதுறையினர் தீயை அணைத்தபோது போலீஸ் பூத்திருக்குள் இளைஞர் ஒருவர் உடல் முழுவதிலும் எரிந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளார். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த தல்லாகுளம் காவல்துறையினர் உடலை மீட்பு ஆம்புலன்ஸ் மூலமாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக அனுப்பிவைத்துள்ளனர்.
பூரணசந்திரன் என்று கூறப்படும் அந்த இளைஞர், உயிரை மாய்த்து கொள்வதற்கு பேசியதாக ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதில் ”திருப்பரங்குன்றம் முருகனின் முதல்படை வீடு. அங்கு தீபம் ஏற்றுவது மதுரை மக்களுக்குத்தான் பெருமை. திருப்பரங்குன்றம் மலையில் தர்கா உள்ளது. அங்கிருந்து 15 மீட்டர் தூரத்தில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.ஆனால், அதனை நிறைவேற்ற மறுக்கிறார்கள். அதனை ஏன் அரசு தடுக்க நினைக்கிறது. இஸ்லாமியர்கள் யாரும் அதனை தடுக்கவில்லை. என்னுடனும் ஏராளமான இஸ்லாமியர்கள் படித்தார்கள். மதுரை மக்களிடையே கலவரத்தை தூண்ட நினைக்கிறார்கள்.
மன்னித்து விடுங்கள்.. ஒரு இந்துவாக தீபம் ஏற்றாமல் இருப்பதை மன வருத்தமாக இருக்கிறது. மக்கள் பல்வேறு கட்டங்களாக போராடி வருகின்றனர். எனவே, கடவுள் இல்லை என கூறும் பெரியார் சிலை முன்பு தற்கொலை செய்ய போகிறேன். 2026-ம் ஆண்டிலாவது தீபம் ஏற்ற வேண்டும். எனக்கு இனியா, சிவனேஷ் என்ற குழந்தைகள் உள்ளனர். மனைவி, குழந்தைகளும் என்னை மன்னித்து விடுங்கள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தல்லாகுளம் காவல்துறையினர் பூர்ண சந்திரனின் செல்ஃபோனை கைப்பற்றி விசாரணை நடத்திவருகின்றனர்.
திருப்பரங்குன்றம் விவகாரம்
திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டார். ஆனால் உச்சிப் பிள்ளையார் கோயில் பகுதியில் மட்டும் தீபம் ஏற்றப்பட்டது. இதனை தொடர்ந்து மாநில அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டு வழக்கு நடைபெற்று வருகிறது. அதே நேரத்தில் திருப்பரங்குன்றம் மலை தீப தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் திமுக உள்ளிட்ட எதிர்கட்சி எம்.பி.க்கள் இம்பீச்மென்ட் நோட்டீஸ் அளித்துள்ளனர்.







