மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை மகா தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில், நேற்று (நவம்பர் 24) அந்த மலைத் தூணில் தீபம் ஏற்றப்படவில்லை. மாறாக, வழக்கம்போல உச்சிப்பிள்ளையார் கோயில் அருகே உள்ள தீப மண்டபத்தில் மகா தீபம் ஏற்றப்பட்டது.
இந்த நிலையில், தேவஸ்தானம் தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்கான குழுவை அமைத்துப் பரிந்துரைக்காததால், உச்சநீதிமன்ற உத்தரவின்படி தீபத்தூணில் தீபம் ஏற்ற முடியவில்லை என்று மதுரை மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா உச்சநீதிமன்றத்தில் 17 பக்க அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளார்.
அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:
“தேவஸ்தானம் தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்கான குழுவை அமைத்துப் பரிந்துரைக்காததால், உச்சநீதிமன்ற உத்தரவின்படி தீபத்தூணில் தீபம் ஏற்ற முடியவில்லை. தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்கான அதிகாரம் கொண்ட குழு பரிந்துரைக்கப்படாததால், அதற்குப் பதிலாக அறங்காவலர் குழுவானது வழக்கமான இடத்தில் தீபம் ஏற்றத் தீர்மானித்தது. இதனைத் தொடர்ந்து, ஒவ்வொரு கார்த்திகைத் திருநாளன்றும் வழக்கமாகத் தீபம் ஏற்றும் உச்சிப்பிள்ளையார் கோயில் மண்டபத்தில், கோயிலின் மரபுகளுக்கு உட்பட்டு திருக்கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது.
தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, கடந்த 20ஆம் தேதி வருவாய்த்துறை அதிகாரிகளுடனும், 21ஆம் தேதி இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் மற்றும் காவல் ஆணையருடனும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, திருப்பரங்குன்றம் வட்டாட்சியர் மற்றும் பிற அலுவலர்களுடன் ஒருங்கிணைப்புக் கூட்டம் நடத்தப்பட்டது. அதில், உச்சநீதிமன்றத்தின் உத்தரவு ஒவ்வொரு பத்தியாக விளக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, தேவஸ்தானத்தால் அங்கீகரிக்கப்பட்ட பத்து நபர்களுக்கு மிகாமல் தீபம் ஏற்றும் நிகழ்வை நடத்த முடிவு செய்யப்பட்டது. தீபம் ஏற்றுவதைப் பொறுத்தவரை, கோயில் வழக்கப்படி செயல் அலுவலரால் விளக்கேற்றும் முறை தீர்மானிக்கப்படும். சிஆர்பிஎஃப் படையினரின் பாதுகாப்பு தேவையில்லை என்றும், தமிழகக் காவல்துறைப் படைகளை நிலைநிறுத்தும் திட்டம் தயாராக உள்ளது என்றும் காவல் ஆணையர் தெரிவித்தார். 24ஆம் தேதி தீபம் ஏற்றும் பணியானது தேவஸ்தானத்தால் அங்கீகரிக்கப்பட்ட நபர்களைக் கொண்ட குழுவினரால் மட்டுமே பிரத்யேகமாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், அதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறும் தேவஸ்தான செயற்குழுவுக்கு அறிவுறுத்தப்பட்டது.
இந்த நிலையில், தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்கு ஆதரவாகவும், அதற்கு எதிராகவும் பல்வேறு அமைப்புகள் அணிதிரள்வது குறித்தும், போராட்டங்கள் நடத்துவது குறித்தும் நம்பகமான தகவல்கள் கிடைத்தன. அசம்பாவிதங்களைத் தடுப்பதற்காகவும், போராட்டங்கள், கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்கள், பொதுக்கூட்டங்கள் நடத்துவதற்கும், திருப்பரங்குன்றம் மலையில் ஏறுவதற்கும் எவருக்கும் அனுமதி மறுக்கும் வகையில், மதுரை மாவட்டத்தில் பிஎன்எஸ்எஸ் பிரிவு 163-ன் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்தத் தடை உத்தரவானது 25ஆம் தேதி காலை 10 மணி வரை அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, 24ஆம் தேதி காலை முதல் நண்பகல் 12.30 மணி வரை நேரடியாகத் திருப்பரங்குன்றம் சென்று, அங்கு செய்யப்பட்டிருந்த ஏற்பாடுகளை ஆய்வு செய்தேன். மேலும், மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் காவல் ஆணையருடன் கலந்துரையாடினேன். இதையடுத்து, தீபம் ஏற்றும் நிகழ்வு நடைபெறும் மாலை 6 மணி முதல் 6.30 மணிக்குள் தேவஸ்தானத்தால் அங்கீகரிக்கப்பட்ட குழுவினர் வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது.
ஆனால், மாலை 6 மணி முதல் 6.30 மணி வரையிலான காலகட்டத்தில் தேவஸ்தானத்தால் அங்கீகரிக்கப்பட்ட குழுவினர் தீபம் ஏற்ற வரவில்லை. தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்கு உரிய நபர்களுக்கு அதிகாரம் அளித்து, கோயில் தேவஸ்தானம் எந்தவொரு கட்டத்திலும் மாவட்ட ஆட்சியரிடம் தெரிவிக்கவில்லை. தேவஸ்தானத்திற்கு விளக்கேற்றும் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ள நிலையில், தேவஸ்தானத்தால் அங்கீகரிக்கப்பட்ட குழுவை அமைத்து, அதன் உறுப்பினர்களின் பெயர்களையும் தெரிவிக்கவில்லை.
இதுதொடர்பாக, இந்து சமய அறநிலையத் துறைச் செயலாளருக்கும் மாவட்ட ஆட்சியர் என்ற முறையில் மின்னஞ்சல் மற்றும் நினைவூட்டல் கடிதங்கள் உள்ளிட்டவற்றை அனுப்பியிருந்தேன். ஆனால், தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்கான அதிகாரம் கொண்ட குழு பரிந்துரைக்கப்படாததால், அதற்குப் பதிலாக அறங்காவலர் குழுவானது வழக்கமான இடத்தில் தீபம் ஏற்றத் தீர்மானித்தது. இதனைத் தொடர்ந்து, ஒவ்வொரு கார்த்திகைத் திருநாளன்றும் வழக்கமாகத் தீபம் ஏற்றும் உச்சிப்பிள்ளையார் கோயில் மண்டபத்தில், கோயிலின் மரபுகளுக்கு உட்பட்டு திருக்கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது.
தேவஸ்தானம் தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்கான குழுவை அமைத்துப் பரிந்துரைக்காததால், உச்சநீதிமன்ற உத்தரவின்படி தீபத்தூணில் தீபம் ஏற்ற முடியவில்லை. அதேவேளையில், உச்சநீதிமன்றத்தின் உத்தரவைச் செயல்படுத்துவதற்காக மாவட்ட ஆட்சியர் என்ற முறையில் எனது அதிகாரத்திற்கு உட்பட்டு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்தேன்” என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.




